tamilnadu

10-ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் 8-ம் இடம் பிடித்தது பெரம்பலூர்

பெரம்பலூர், ஏப்.30-10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 97.33 விழுக்காடு தேர்ச்சி பெற்று மாநில அளவில் 8-ஆம் இடத்தை பிடித்துள்ளது.பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 4,520 மாணவர், 4,135 மாணவிகள் என மொத்தம் 8,655 பேர் எழுதினர். இதில் 4,358 மாணவர்களும், 4,066 மாணவிகளும் என மொத்தம் 8,424 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 96.40 தேர்ச்சி விகிதமும், மாணவிகள் 98.33 தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளனர். இதன்படி பெரம்பலூர் மாவட்டம் மொத்தமாக 97.33 தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. மாவட்டத்தில் உள்ள 90 அரசு பள்ளிகளில் 2,139 மாணவர்களும், 2,310 மாணவிகளும் என 4,449 பேர் தேர்வெழுதினர். இதில் 1,987 மாணவர், 2,247 மாணவிகளும் என 4,234 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் ஆண்கள் 92.89, மாணவிகள் 97.27 சதவீதம் என மொத்தம் 95.17 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 93.08 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்தாண்டு 95.17 சதவீதம் பெற்று முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.மாவட்டத்தில் மொத்தம் 140 பள்ளிகள் உள்ளன. இதில் 80 அரசுப் பள்ளிகளில் 34 பள்ளிகளும், 10 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 7 பள்ளிகளும், 6 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2 பள்ளிகளும், 14 சுயநிதிப் பள்ளிகளில் 12 பள்ளிகளும், 30 மெட்ரிக் பள்ளிகளில் 29 பள்ளிகளும் என மொத்தம் 84 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.கடந்தாண்டு பெரம்பலூர் மாவட்டம் 96.20 பெற்று மாநில அளவில் 10-வது இடத்தை பெற்றிருந்தது. இந்தாண்டு 97.33 விழுக்காடு தேர்ச்சி பெற்று மாநில அளவில் 8 இடத்தினை பெற்றுள்ளது. தேர்ச்சி விகிதத்தில் 2 சதவீதம் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.