தஞ்சாவூர், ஜூன் 4-தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த சின்னகண்டியூரில் தர்மராஜ் மகன் சுரேஷ் என்பவர் வீட்டை பூட்டி விட்டுவேலைக்கு சென்று விட்டார். திங்கள்கிழமை மதியம் அவரதுகூரை வீட்டில் மின் கசிவின் காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ மேலும் பரவி அருகிலிருந்த 20 வீடுகளில்எரிந்தது.தகவல் அறிந்ததும் திருவையாறு தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேம்குமார், திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு அலுவலர் செல்வராஜ், தஞ்சாவூர் அலுவலர்கள் திலகர், சித்தார்த்தன் ஆகியோரது தலைமையில் வீரர்கள், சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் 20 வீடுகளிலிருந்த நகைகள், ரொக்கம் உள்ளிட்ட பொருட்கள் எரிந்துசாம்பலானது. இதன் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் என கூறப்படுகிறது. ஒருவர் காயம் அடைந்தார். தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் இல்லை. திருவையாறு வட்டாட்சியர் இளம்மாருதி, கூட்டுறவு நிலவள வங்கித் தலைவர் இளங்கோவன், திருவையாறு ஊராட்சிஒன்றிய ஆணையர் சாமிநாதன், காவல்துறை ஆய்வாளர் ஜெகதீசன், உதவி ஆய்வாளர்கள் ரூபாவதி, ரவிச்சந்திரன் ஆகியோர் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும், எரிந்து போன குடும்ப அட்டை, வங்கி பாஸ் புத்தகம், பத்திரங்கள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சான்றிதழ்கள் ஆகியவற்றை உடனடியாக அவர்களுக்கு வழங்கிட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டார்.