திருவாரூர், மே 9-தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை, அரவை பணிக்காக எடுத்துச் செல்வதற்கு மில் உரிமையாளர்களின் லாரிகளில் மட்டுமே லோடுகள் ஏற்றப்படும் என்ற புதியநடைமுறையை கண்டித்து லாரிகள் வேலை நிறுத்தப் போராட் டத்தை திருவாரூர் மாவட்ட லாரிஉரிமையாளர் சங்கத்தினர் தொடங்கியுள்ளனர்.திருவாரூர், மன்னார்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் இயங்கும் சுமார் 3200 லாரிகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை திறந்தவெளி கிடங்குகளுக்கும், அரவை பணிகளுக்காக மாவட்ட அரிசி அலைகளுக்கும், வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக திருவாரூர், நீடாமங்கலம், பேரளம் ஆகிய ரயில் நிலையங்களுக்கும் ஏற்றிச் சென்று வருகின்றன. இந்த நடைமுறையை மாற்றிஅரவை பணிகளுக்காக ஏற்றப்படும் லோடுகளை மில் உரிமையாளர்களே தங்களது லாரிகள்மூலம் ஏற்றிச் செல்ல நுகர்பொருள் வாணிபக் கழகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் இதனை தட்டிக்கேட்கும் லாரி உரிமையாளர்கள் மீது வழக்கு போட்டும் மில் உரிமையாளர்கள் அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரவை பணிகளுக்காக லோடுகளை மில் உரிமையாளர்கள் ஏற்றிக்கொள்ள அனுமதித்து இருப்பதால் லாரி தொழிலை நம்பியுள்ளஉரிமையாளர்கள், தொழிலாளர்கள் உட்பட 10 ஆயிரத்துக்கும்மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப் படும் என்பதை உணர்ந்து, மில் உரிமையாளர்களின் லாரிகளில் அரவைக்கான லோடுகளை ஏற்றும் நடைமுறையை ரத்து செய்யக் கோரி இந்த வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.