புதுக்கோட்டை, மே 9- நம் நாட்டில் ஆண்டு தோறும் சுமார் ஒரு லட்சம் பேர் தற்கொலையால் உயிர் இழக்கின்றனர். உயிரியல், உளவியல், சமூக, பொருளாதார, கலாச்சார காரணிகளின் கூட்டுத் தாக்கத்தின் அறிகுறியே தற்கொலை நிகழ்வு. தற்கொலை முடிவு ஒரு கோழைத்தனமான செயல் என்று தனி நபரைக் குற்றப்படுத்துவது அறியாமை ஆகும். பாதிக்கப்பட்டவரின் தனிநபர் சார்ந்த சிக்கலாக மட்டுமே இதை அணுகுவது கூடாது. சமூக பொருளாதார கலாச்சார புறக்காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். தனி நபர்களுக்கு ஏற்படும் தற்கொலை எண்ணங்களை புரிந்து கொள்ளவும், மீட்டெடுக்கவும் ஒட்டு மொத்த சமூகமும் அக்கறையோடு முன்வர வேண்டும்.எனவே சக மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தை உற்று கவனிப்பதும், தீர்வு காண்பதற்கு கூட்டாகப் பயணிப்பதும் அவசியம். மனநல பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு உளவியல்(கவுன்சிலிங்) சிகிச்சை கிடைக்க உதவ வேண்டும். மேலும் தற்கொலை தடுப்புக்கு இலவச தொலைபேசி 104 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மாவட்ட மனநல ஆலோசனை மையம் 94860- 67686, மருத்துவக் கல்லூரி அவசர சிகிச்சை பிரிவு 04322- 271382 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என புதுகை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.