வீடு புகுந்து பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
தூத்துக்குடி, மே 5-உடன்குடி அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே சீர்காட்சிஅம்மன்புரத்தைச் சேர்ந்தவர் சரவணன் (35). இவர் திருப்பூரில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவருடையமனைவி ராமலட்சுமி (32). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சரவணன் தன்னுடைய குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவில் சரவணன் தன்னுடைய மனைவி, மகளுடன் அப்பகுதியில் உள்ள தன்னுடைய அக்காளின் வீட்டுக்கு சென்றார். பின்னர் இரவில் அனைவரும் அங்கு தூங்கினர். அப்போது அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதால், காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கினர்.இதனை நோட்டமிட்ட மர்மநபர், வீட்டின் காம்பவுண்டு சுவரை தாண்டி குதித்து உள்ளே நுழைந்தார். பின்னர் வீட்டில் தூங்கிய ராமலட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த5 பவுன் தங்க தாலிச் சங்கிலியை பறித்தார். அப்போது கண்விழித்த ராமலட்சுமி கூச்சலிட்ட உடனே கண்விழித்த சரவணன் உள்ளிட்டவர்கள் மர்மநபரை விரட்டிச் சென்றனர். ஆனாலும் மர்மநபர் நகையுடன் இருளில் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், மெஞ்ஞானபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த மர்மநபரை தேடி வருகின்றனர்.
திருவிழாவில் நகை திருட்டு
தூத்துக்குடி, மே 5-நாசரேத்தில் கோவில்திருவிழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் சுமார் 3 பவுன் நகை திருடப் பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.நெல்லை மாவட்டம் உசிலங்குளம் பகுதியை சேர்ந்தவர் சீனி. இவரது மகள் கீதா (25). இவர் நாசரேத்தில் நடந்த ஒரு கோவில் திருவிழாவிற்கு வந்துள்ளார். அப்போதுகூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் கீதா அணிந்திருந்த சுமார் 3 பவுன் நகைகளை திருடி விட்டு மாயமாகி விட்டார். இதுகுறித்து கீதா அளித்த புகாரின் பேரில் நாசரேத் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குந்நத்துகால் ஸ்ரீ சித்திரதிருநாள் பள்ளி 100% தேர்ச்சி
அருமனை, மே 5-திருவனந்தபுரம் மாவட்டம் குந்நத்துகால் ஸ்ரீ சித்திரதிருநாள் ரெஷிடன்சியல் சென்டரல் பள்ளியில் +2 சி.பி.எஸ்.இ தேர்வில் 100ரூ தோ்ச்சி பெற்றுள்ளனர்.இப்பள்ளியில் 65 மாணவ மாணவிகள் தோ்வு எழுதினர். இதில் 33 மாணவ மாணவிகள் மாவட்ட அளவிலும் 32 மாணவ மாணவிகள் பள்ளியில் முதல் நிலையிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்மாணவ மாணவிகளை பள்ளியின் தாளாளர்், நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.
கஞ்சா விற்றவர் கைது
நாகர்கோவில், மே 5-கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே அண்ணா பேருந்து நிலையத்தில் கோட்டாறு காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றி திரிந்த வாலிபரை காவல் துறையினர் பிடித்து விசாரித்தனர்.அப்போது அவன் வைத்திருந்த பையில் 1.25 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவன் பறக்கை ரோட்டை சேர்ந்த ராஜகணேஷ் (25) என்பதும், மதுரை பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, நாகர்கோவிலில் அதிக விலைக்கு விற்று வந்ததாக தெரிவித்துள்ளார்.இதையடுத்து கஞ்சா விற்ற ராஜகணேசை மீது வழக்குபதிவு செய்து கோட்டாறு காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.