நாகப்பட்டினம், ஏப்.5-நாகை மாவட்டம் வேதாரணியம் வட்டம், கரியாப்பட்டினத்தில் நடைபெற்றஹைட்ரோ கார்பன் எதிர்ப்புப் போராட் டத்தில் பங்கேற்றுக் கைதாகித் திருச்சிமத்தியச் சிறையில் இருந்து, பின் நிபந்தனைப் பிணையின் பேரில் விடுதலையான அகிலன் வியாழக்கிழமை அன்று காலமானார். இவருக்கு வயது-32.கரியாப்பட்டினத்தில் ஊர்ப் பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட, அனைத்து அரசியல் கட்சியினர், அனைத்து விவசாய சங்கங்கள் இணைந்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்துப் பல்வேறுபோராட்டங்களை, பிப்ரவரி மாதத்தில் தொடங்கி நடத்தி வந்தனர். தொடர்ந்து, மார்ச்-3 முதல் தொடர் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தி வந்தனர். இந்தப் போராட்டம் அனைத்திலும் கரியாப்பட்டினம், கவுண்டர்காடு பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் அகிலன் தீவிரமாக ஈடுபட்டார். அகிலன், வெளிநாட்டில் வேலை செய்து, ஊர் திரும்பிய நிலையில் போராட் டத்தில் பங்கேற்றார். மார்ச்-7 அன்று மாலை, காவல் துறையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டுப் போராட்டக் காரர்கள்மீது அராஜக முறையில் தாக்குதல் நடத்திப் போராட்டப் பந்தலையெல்லாம் பிரித்து எரிந்தனர். அன்று நள்ளிரவில் கரியாப்பட்டினத்தில் வீடு வீடாகப் புகுந்து, போராட்டக் குழுவினரைக் கைது செய்தனர்.மார்ச்-9 அன்று, மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆ.நடராஜன், மா.அகிலன், த.சரவணமுத்து, ஜி.கோவிந்தராஜு, எம்.ஜி.குமார், என்.பாலசுப்பிரமணியன், பி.ரமேஷ் ஆகிய 7 பேர் மீதுவழக்குகள் போட்டு, திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் மார்ச்-18 அன்று இந்த 7 பேரும் நிபந்தனைப் பிணையின் பேரில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். இந்த 7 பேரும் வேதாரணியம் நீதிமன்றத்தில்திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை தினங்களில் கையெழுத்திட்டு வந்தனர், இதனால், அகிலன் தான் திரும்பவும் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லமுடியாதோ என மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். வியாழக்கிழமை காலை அகிலனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். இவருக்கு மனைவியும் 6 மாதக் குழந்தையும் உள்ளனர்.