tamilnadu

img

பெல் கூட்டுறவு வங்கி கொள்ளை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்.... தமிழக முதல்வருக்கு சிஐடியு கடிதம்....

திருச்சிராப்பள்ளி:
திருச்சி பெல் கூட்டுறவு வங்கியில் நடந்த ஒன்றரை கோடி ரூபாய் கொள்ளை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி சிஐடியு சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிஐடியு தொழிற்சங்க பொதுச் செயலாளர் பிரபு தெரிவித்திருப்பதாவது:

திருச்சி பெல் நிர்வாக கட்டிட வளாகத்திற்குள் செயல்பட்ட வங்கியில் கடந்த 2019 ஆம் ஆண்டு 31-ஆம் தேதி பெல் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த ஒன்றரை கோடி ரூபாயை முகமூடி அணிந்த மர்ம நபர் கொள்ளையடித்துச் சென்றார். இந்த கொள்ளை சம்பவம் வங்கியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து பெல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் பணம் மற்றும் கொள்ளையர் குறித்து எவ்வித துப்பும் கிடைக்கவில்லை.

இதையடுத்து சிஐடியு-வினர் பெல் உயரதிகாரியிடம் உரிய நடவடிக்கை கோரி மனு கொடுத்தனர். ஆனாலும் இவ்வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. எனவே கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட கோரி மனு அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் தேதி பெல் போலீசார் சிஐடியு சங்கத்தினரிடம், விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடித்து, கொள்ளை போன பணமும் மீட்கப்படும் என தெரிவித்தனர். 

ஆனால் இதுவரை பெல் போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை,  பணத்தையும் மீட்கவில்லை. எனவே குற்றவாளிகளை கண்டுபிடிப்பது, கொள்ளை போன ஒன்றரை கோடி ரூபாயை மீட்பதற்கு, தமிழக முதல்வர் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பெல் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.