திருச்சிராப்பள்ளி, ஜூன் 24- திருச்சி ஆட்சியர் சிவராசுவிடம், மனு கொடுக்க ஸ்ரீரங்கம் பகுதிக்குழு செயலாளர் தர்மா தலைமையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோமணம் கட்டிக் கொண்டும், அரை நிர்வாணத்துடன் கோரிக்கை அட்டைகளை எடுத்து கொண்டு வந்தனர். அப்போது மாவட்ட தலைவர் சந்திரபிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள பல தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. தமிழக அரசு இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்க தயாராக இல்லை. இதில் ஸ்ரீரங்கம் மெட்ரிக் பள்ளியில் இலவச கட்டாய கல்வியில் மாணவர்களை சேர்க்க பள்ளி நிர்வாகத்தினர் மறுக்கின்றனர். இலவச கட்டாய கல்வி இடஒதுக்கீட்டில் சேர்ந்தாலும் கல்வி கட்டணத்தை கட்டாயம் கட்டவேண்டும் என கூறி பணம் பெற்றுள்ளனர். இதுகுறித்து ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பின்னர் அவர்கள் தங்கள் கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் வழங்கினர். இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட தலைவர் சந்திரபிரகாஷ், பகுதிக்குழு உறுப்பினர்கள் லோகு, சந்துரு, சசி, முத்து, வெற்றிவேல், ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.