tamilnadu

img

பாவலர் க.மீனாட்சி சுந்தரம்  உடல் தானம்

திருவாரூர், மே 16- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் மேலவை உறுப்பினரும் ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளரும் நாகை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வி.செல்வகுமாரின் தந்தையுமான பாவலர் க.மீனாட்சிசுந்தரம் வியாழக்கிழமையன்று உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவு செய்தி அறிந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.   நாகை மாவட்டம், தலைஞாயிறில் உள்ள அவரது இல்லத்தில் பாவலர் க.மீனாட்சி சுந்தரம் உடலிற்கு தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நாகை ஆட்சியர், முன்னாள் மத்திய, மாநில  அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், நாகை, திருவாரூர் மாவட்ட அரசு அலுவலர்கள், செய்தி மற்றும் ஊடகத்துறையினர் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர். மறைந்த பாவலர் க.மீனாட்சிசுந்தரம் விருப்பத்தின் பேரில் எந்தவிதமான சம்பிரதாய சடங்குகளும் நடத்தப்படவில்லை. மேலும் அவரது உடல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு வெள்ளிக்கிழமையன்று மாலை தானமாக ஒப்படைக்கப்பட்டது.