குடவாசல், ஜூன் 22- திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் சாராநத்தம் ஊராட்சி கிராமத்தில் தேர்தல் காழ்ப்புணர்ச்சி காரணமாக விவசாய தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை வழங்குவதில்லை பாகுபாடு இன்றி அனைவருக்கும் 100 வேலை வழங்கிட கோரி திங்கள்கிழமை வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர்கள் வி.பேச்சிமுத்து, என்.கலியபெருமாள், ஆர்.சங்கீதா முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், ஒன்றிய செயலாளர் என்.ராதா ஆகியோர் கண்டன உரையாற்றினார். விதொச ஒன்றியச் செயலாளர் என்.பாலையா, மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர்.சந்திரோதயம், நகர செயலாளர் எஸ்.சாமிநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக வட்டார ஆணையரிடம் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்க சென்ற போது மனுவை கூட வாங்க வட்டார ஆணையர் வரவில்லை. பின்னர் துணை வட்டார வளர்ச்சி ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது.