திருவண்ணாமலை, மே 6-திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், கலசபாக்கம், போளூர் செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து வருவதாக பொது மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத் தில் செய்யாறு, கமண்டல நாகநதி ஆற்றுப் படுகைகளிலும், ஏரிகளிலும் தொடர்ந்து மணல் மற்றும் மண் கடத்தல் நடைபெற்று வருகிறது. ஜேசிபி இயந்திரம், டிராக்டர், மாட்டு வண்டிகள் மூலமும், இருசக்கர வாகனங்களிலும் கூட மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. ஆற்றுப்பகுதிகளில் ராட்சத பள்ளம் தோண்டி மணல் கடத்தப் படுகிறது. மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு செல்வதற்கு இந்த மணல் கடத்தலே முக்கிய காரணம் என்றும், இதை தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரே இதற்கு உடந்தையாக செயல்படுகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவிக்கின்றனர் பொது மக்கள்.இந்த மணல் கடத்தல் குறித்து அரசு அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் புகார் அளிக்கும் நபர்களை கொலை செய்வதும், தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆம் தேதி திருவண்ணாமலை அடுத்த குண்ணுமுறிஞ்சி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தினகரன்(36) என்பவர் திருவண்ணா மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வெட்டி படுகொலை செய் யப்பட்டார். மணல்கடத்தல் குறித்து புகார் தெரிவித்ததே இந்த கொலைக்கு காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.செங்கம் அடுத்த தளவாய்நாக்கன் பேட்டையை சேர்ந்த வெங்கடே சன் என்பவர் மணல் கடத்தல் குறித்து புகார் தெரிவித்ததால், தாக்கப்பட்டுள்ளார். செங்கம் சேயாறு பகுதிகளிலும், கரிமங்கலம் பகுதியிலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள் திங்களன்று(மே6) பறிமுதல் செய்யப்பட்டுள் ளது. இதேபோல், ஆரணி குன்னத் தூர் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செய்யாறு அடுத்த கனிகிலுப்பை பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனை நடத்தியபோது, மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல் நடைபெற்றதை கண்டுபிடித்து, வண்டிகளை பறிமுதல் செய்ததுடன் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர்.ஆரணியை அடுத்த முனியன் குடிசைப் பகுதியில் கமண்டல நாகநதி ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்டபோது, மணல்மேடு சரிந்ததில், வெற்றிவேல் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆற்றுமணல் மட்டுமின்றி, பரவலான ஏரிகளிலும் மண் கடத்தல் நடைபெறுகிறது. எனவே, அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் இந்த கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுதுள்ளனர்.