tamilnadu

குடிநீர் கோரி பொதுமக்கள் மறியல்

திருவண்ணாமலை, ஏப். 11-திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பரமனந்தல் காமராஜ் நகர் பகுதியில் சுமார் இரண்டு மாதமாக முறையான குடிநீர் விநியோகம் இல்லை. இதனால், கோபமடைந்த அப்பகுதி பொதுமக்கள் குப்பநத்தம் அணையிலிருந்து செங்கத்தை நோக்கி வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்து காலி குடங்களை சாலையில் வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.இதனை அடுத்து அங்கு வந்த செங்கம் காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த அப்பகுதி பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.வசதி படைத்தவர்கள் சிலர் மின் மோட்டார்களை பயன்படுத்தி குடி தண்ணீரை உறிஞ்சுவதாக குற்றம் சாட்டினர். பிறகு, காவல் ஆய்வாளர் ஊராட்சி செயலாளரை வரவழைத்து பேசினார். ஊராட்சி செயலாளர் அவர்களது பகுதியில் சட்டவிரோதமாக மின் மோட்டாரை பயன்படுத்தி குடிதண்ணீரை திருடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மின்மோட்டாரை பறிமுதல் செய்து பொதுமக்களுக்கு முறையான குடிநீர் வழங்க வழிவகை செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.