திருவண்ணாமலை, மே 18- திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுக்கா அலுவலகம் அருகே, பல லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட நவீன சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. திறந்தவெளியை பயன் படுத்தும் நிலையில் மக்கள் உள்ளனர்.கலசபாக்கத்தில், நவீன சுகாதார வளாகம், 4 லட் சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவழித்து கடந்த 2012 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப் பட்டது. ஆனால், ஆண்டுகள் ஏழு ஆகியும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. வளாகம் பராமரிப்பு இல்லாததால், முட்செடிகள் வளர்ந்து கட்டடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. வளாகத்தை செயல்படுத்த மக்கள் பலமுறை கோரிக்கை வைத்த போதும், அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பதில்லை. மக்களுக்கு பயன் இல்லாமல் அரசு நிதி வீணாகிறது. வளாகம் கட்டி முடித்தும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் அருகில் உள்ள ஆற்றுப் பகுதியே மக்களின் திறந்தவெளி கழிவறையாக மாறிவருகிறது. எனவே, இதுகுறித்து அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர் பார்ப்பு தெரிவித்துள்ளன.