tamilnadu

லஞ்சத்தில் சிக்கிய மின் வாரிய அதிகாரிகள் பணியிட மாற்றம்

திருவண்ணாமல, மார்ச்.8-  திருவண்ணாமலை மாவட்டத்தில் லஞ்ச வழக்கில் சிக்கிய மின் வாரிய அதிகாரிகள் 4 பேரை வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்து தமிழக மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த விழுப்புரம் கோட்ட மின் வாரியத்தின் தலைமைப் பொறியாளர் சிவராஜ் (58) கடந்த ஜனவரி 4 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வந்து பொங்கல் பரிசுப்பொருள்கள், லஞ்சப் பணத்தை பெறப்போவதாக ஊழல் தடுப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவண்ணாமலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.  அதன்படியே, கீழ்பென்னாத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து தலைமைப் பொறியாளர் சிவராஜ் பணம், நகைகளை பெற்றுக் கொண்டு வேட்டவலத்துக்கு சென்றவருடன் பின்தொடர்ந்து காவல்துறையினர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே மின் வாரிய அதிகாரிகளின் 3 கார்களை மடக்கி சோதனையிட்டனர். அதில் கணக்கில் வராத ரூ.73 ஆயிரம், 8 கிராம் தங்க நாணயங்கள், 10 சால்வைகள், 2 சட்டைத் துணிகள் பறிமுதல் செய்யப்பட்டன.  தொடர் விசாரணையில், விழுப்புரம் கோட்ட மின் வாரிய தலைமைப் பொறியாளர் சிவராஜ் (58), திருவண்ணாமலை மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் நாகராஜன் (58) மற்றும் மின் வாரிய கட்டடவியல் பிரிவின் உதவி செயற்பொறியாளர் ஜீவானந்தம், மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளரின் அரசு வாகன ஓட்டுநர் சண்முகம் ஆகிய 4 பேர் மட்டும் பொங்கல் பண்டிகைக்காக பணம், தங்க நாணயங்களை வசூலித்தது உறுதி செய்யப்பட்டு, 4 பேர்மீதும் ஊழல் தடுப்புப் பிரிவு காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதனிடையே, லஞ்ச வழக்கில் சிக்கிய 4 பேரையும் வெவ்வேறு ஊர்களுக்கு பணியிட மாற்றம் செய்து தமிழக மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் கோட்ட மின் வாரிய தலைமைப் பொறியாளர் சிவராஜ், திருச்சி தலைமைப் பொறியாளர் (சிஸ்டம் ஆபரேஷன்) பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதேபோல, திருவண்ணாமலை மேற்பார்வைப் பொறியாளர் நாகராஜன், விழுப்புரம் மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளராகவும் (ஆபரேஷன்), திருவண்ணாமலை உதவி செயற்பொறியாளர் ஜீவானந்தம், கடாம்பாறை நீர்மின் தேக்க உற்பத்தித் திட்ட மாடம்பள்ளி கட்டடவியல் பிரிவு உதவி செயற்பொறியாளராகவும், ஓட்டுநர் சண்முகம் கரூர் மின் வாரிய அலுவலகத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.