திருவண்ணாமலை, பிப். 16- திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் அடுத்த சாமாலை கிராமத்தில் தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்றச் சங்கத்தின் மாவட்டக் குழு கூட்டம் ஞாயிறன்று (பிப். 16) நடைபெற்றது. சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கங்காதரன், மலைவாழ் பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் இரா.சரவணன், நிர்வாகிகள் டி.கே.வெங்கடேசன், ஏ.இலட்சுமணன், காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மலைவாசி மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு போதுமான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மலைகிராம வேட்டைக்காரன் பழங்குடி இன மக்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு மட்டுமே பதில் அளிப்போம், சிஏஏ, என்ஆர்சி,என்பிஆர் கணக்கெடுப் பிற்கு எந்தவிபரத்தையும் அளிக்க மாட்டோம், தமிழ்நாட்டில் 1 லட்சம் பேரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்ட கிராமங்களில் வேட்டைக்காரன் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க , பழங்குடி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனருக்கு உத்தரவிட்டு, அங்கிருந்து அறிக்கை பெற்று, மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் வேட்டைக்காரன் இன மக்களில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 7 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், போட்டி யிட்டு வெற்றி பெற்ற 8 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்டவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.