திருவண்ணாமலை, ஜூலை 1- திருவண்ணாமலை நகரில் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலையில் செவ்வாயன்று (ஜூன் 30) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் களப்பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், நகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து மூடப்பட்டது. அதேபோல் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் கடந்த 15 நாட்களுக்கு முன்னரே சிலருக்கு தொற்று உறுதியானதையடுத்து, அந்தப் பகுதியில் தடுப்பு வேலி போட்டு பொதுமக்கள் யாரையும் அந்தப் பகுதியில் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் அதே பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செய்யாறு நகர காவல் நிலையத்தில், காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் காவல் நிலையம் மூடப்பட்டது. திருவண்ணாமலை தனியார் நகைகடை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து நகைக்கடை மூடப்பட்டது. புதனன்று மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1861 ஆக உயர்ந்துள்ளது.