திருவொற்றியூர், ஜூலை 17- எண்ணூர் அனல்மின் நிலையத்தை நவீன தொழில் நுட்பங்களுடன் விரிவாக்கம் செய்ய கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டது. பின்னர் பல்வேறு காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த பணியின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு பணிகள் நிறுத்தப்பட்டது. அனல் மின் நிலையத்தில் உள்ள எந்திரங்களை குளிர்விப்பதற்காக கடலுக்குள் இருந்து நீரை கொண்டு செல்லும் பணிக்காக ராட்சத பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் கொண்டுவரப்பட்டது. ஆனால் பணிகள் நின்று விட்டதால் அந்த பிளாஸ்டிக் குழாய்கள் அனைத்தை யும் எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 10-வது தெரு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான காலி மைதானத்தில் குவியலாக அடுக்கி வைத்து இருந்தனர். இந்நிலையில் ராட்சத பிளாஸ்டிக் குழாய்களில் செவ்வாயன்று நள்ளிரவு திடீரென்று தீ பற்றியது. காற்றின் வேகத்தில் தீ மளமள வென்று கொழுந்து விட்டு எரிந்தது. இதில் 150அடி நீளமுள்ள 100-க்கும் மேற்பட்ட ராட்சத பிளாஸ்டிக் குழாய்கள் கரும்புகையுடன் எரிந்த தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் அருகில் குடியிருப்புகளில் தூங்கிக்கொண்டு இருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியே வந்தனர். இது குறித்துதீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. திருவொற்றியூர், எண்ணூர், தண்டையார்பேட்டை, மணலி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முயன்றனர்.ஆனால் அதிக எண்ணிக்கையிலான பிளாஸ்டிக் குழாய்கள் என்பதால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டனர்.அதே நேரத்தில் திடீரென்று மழை பெய்ததால் படிப்படியாக போராடி அதிகாலை 5 மணியளவில் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் குழாய்கள் எரிந்து நாசமானது. மேலும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் வடிவேலு உள்பட பலரது வீடுகள் மற்றும் குடிசைகளில் கடும் வெப்பத்தால் வீட்டில் இருந்த பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள். ஏ.சி. மிஷின்கள் மற்றும் மின் சாதன பொருட்கள் எரிந்து போனது. மரங்களும் தீயில் கருகின. நீண்ட நாட்களாக பயன்படுத்தா மல் இருந்த பிளாஸ்டிக் குழாய்கள் குப்பைகளுடன் தரையில் கிடந்த தால் யாராவது புகை பிடித்து சிகரெட் துண்டை அதன் மீது வீசியதில் இந்த தீ விபத்து ஏற்பட்டதா அல்லது சமூக விரோதிகள் தீவைத்தனரா? என்று எண்ணூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.