திருப்பூர், மே 4- சொந்த ஊருக்கு செல்ல ரயில் விடக்கோரி திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூரில் ஊரடங்கு அறிவித்த பிறகு இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் இங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டது. அவர்களில் ஒன்றரை லட்சம் பேருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல அனுமதி அளிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல தயாராகினர்.
ஆனால், பேருந்து, ரயில் போன்ற போக்குவரத்து வசதிகள் இல்லாததால் அவர்கள் செல்ல முடியவில்லை. இதனால் இங்கேயே தங்கி சிரமப்பட்டு வருவதால் தங்களை தங்கள் சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என்றும் கோரி திருப்பூர் ரயில் நிலையம் அருகில் சுமார் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். பீகார், ஒடிசா, உத்திரப்பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த இவர்கள் உணவு மற்றும் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை என்றும் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்ப ரயில் விட வேண்டும் எனக்கோரி முழக்கமிட்டனர். திருப்பூர் சார் ஆட்சியர் கவிதா லட்சுமி, காவல் ஆய்வாளர் கணேசன் உள்ளிட்டோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.