திருப்பூர்:
திருப்பூர் பின்னலாடை நிறுவன தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட உற்பத்தியாளர் அமைப்புகள் பொறுப்பேற்று சொந்த செலவில் நிறைவேற்ற வேண்டும். இதற்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி, உரிய நடவடிக்கை எடுக்கும்படிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கே.ரங்கராஜ் ஆகியோர் செவ்வாய்க் கிழமை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று, மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத்தை நேரில் சந்தித்து பேசினர்.திருப்பூர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்டு இருக்கக்கூடிய வாக்குச்சாவடி மையங்களில் தினமும் சுழற்சி முறையில் நகர வார்டுகள் மற்றும் கிராமம் வாரியாக பொது மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்திருப்பதை வரவேற்கிறோம். அதேசமயம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு மாறாக, தடுப்பூசி போட வருபவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர், வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வர வேண்டும், அவர்களது ஆதார் கார்டில் உள்ள முகவரி அந்த வார்டுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறது. இது அனைவருக்கும் தடுப்பூசி என்ற அடிப்படை கோட்பாட்டிற்கு மாறானது.
திருப்பூரில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில், அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை அதே வாக்குச்சாவடிக்கு உட்பட்டதாக இல்லாமல் போகலாம். அதேபோல் மிகப்பெரும்பான்மையான தொழிலாளர்கள் வாடகை வீடுகளில் குடியிருக்கும் நிலையில், அடிக்கடி வீடு மாறிப் போகும் நிலை உள்ளது. எனவேஆதார் கார்டில் குடியிருப்பு முகவரியை மாற்றாமல் பழைய முகவரியே இருக்கக்கூடிய நிலையும் பலருக்கு உள்ளது. எனவே வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கவேண்டும், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை முகவரி என்பது உள்ளிட்ட விசயங்களை கட்டாயப்படுத்தாமல், வாக்குச்சாவடிக்கு சம்பந்தப்பட்ட வார்டு / கிராமத்தில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதை மாவட்ட ஆட்சியர் உறுதிப்படுத்த வேண்டும்.
பாதுகாப்பு வளையத்தை பலப்படுத்துக!
வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறையினர், சுகாதாரத் துறையினர், உள்ளாட்சித் துறையினரை ஒருங்கிணைத்து, அனைத்துப் பகுதி மக்களையும் அலைக்கழிக்காமல் தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது சரியானது. எனினும் தடுப்பூசி எண்ணிக்கை, போடப்படும் நாள் உள்ளிட்ட விபரங்களை தடுப்பூசி போடுவதற்கு முதல் நாளே வாக்குச்சாவடி மையங்களில் வெளிப்படையாக விளம்பரம் செய்ய வேண்டும்.தமிழக அரசு ஊரடங்கு தளர்வு அறிவித்து திருப்பூரில் 50 சதவிகிதம் தொழிலாளர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதித்து உள்ளது. இதனால்பிற மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தற்போது திருப்பூருக்கு வரத் தொடங்கியுள்ளனர். இந்த பின்னணியில் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரிக்காமல் தடுக்க திருப்பூரில் பாதுகாப்பு வளையத்தை பலப்படுத்த வேண்டும். குறிப்பாக ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய மையங்களில் காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்றுப் பரிசோதனை முகாம் நடத்த வேண்டும்.
பின்னலாடை நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட்டு, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என ஊரடங்கு காலத்தில் தளர்வுகளை அறிவித்த போதே மாநில அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் சிஐஐ தொழில் கூட்டமைப்பைச் சேர்ந்த தனியார் தொழிற்சாலை நிர்வாகங்கள் தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, தனியார் மருத்துவமனைகள் மூலம் தடுப்பூசி போட ஏற்பாடு செய்துள்ளன.
அதற்கான செலவை அந்தந்த தொழிற்சாலைகள் ஏற்றுக் கொள்கின்றன. அதேபோல் திருப்பூரில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அந்தந்த தொழிற்சாலை நிர்வாகங்கள் சொந்த செலவில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும். இது தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) உள்ளிட்ட தொழில் அமைப்புகளை மாவட்ட ஆட்சியர் அழைத்துப் பேசி இதை உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலம் திருப்பூரில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்பட்டு கொரோனா தொற்று பரவாமலும், கடும் பாதிப்பு ஏற்படாமலும் தடுக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். இது குறித்து கவனமாக கேட்டறிந்த ஆட்சியர் எஸ்.வினீத் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.