திருப்பூர்:
ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்றோர் மீதான பழிவாங்கல் நடவடிக்கைகளைக் கைவிட வலியுறுத்தி பிப்.12ஆம் தேதியன்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில பிரதிநிதித்துவப் பேரவை முடிவு செய்துள்ளது.
திருப்பூர் அருகே சின்னக்கரையில் ஜன.8, 9ல்ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில பிரதிநிதித்துவப் பேரவை மாநிலத் தலைவர் எஸ்.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்தபேரவையின் நிறைவாக சனியன்று செய்தியாளர்களிடம் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ரமேஷ் கூறியதாவது, இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநில பிரதிநிதித்துவப் பேரவையில் விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண்மைச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் மக்களுக்கு கொரோனா பரவலைத் தடுக்க அரசு கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. மேலும், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களின் பல்வேறு போராட்டங்களை அடுத்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு உறுதியளித்தது. ஆனால், இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. குறிப்பாக ஜாக்டோ - ஜியோபோராட்டத்தில் பங்கேற்ற1400க்கும் மேற்பட்டோர் மீது ஒழுங்கு நடவடிக்கை, வழக்குப்பதிவு செய்யப்பட்டதை திரும்பப் பெற வேண்டும். அதேபோல் சங்கத்தின் மாநிலத் தலைவர், அரசுஊழியர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியம் பணி ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதை விலக்கிக்கொண்டு அவரை பணி ஓய்வு பெற அனுமதிக்கவேண்டும். கோவை மாவட்டத்தில் வழிமுறைக்குமுரணாக பணி மாற்றம் செய்யப்பட்ட நால்வர்களுக்கு ஆதரவாக, தொடர் வலியுறுத்தலுக்குப் பின் ஒருவர் பழைய பணியிடத்துக்கு மாற்றப்பட்டார். இடமாற்றம் செய்யப்பட்ட மூவர் பல சிரமங்களுடன் உள்ளனர். எனவே அவர்களையும் பழைய இடத்துக்கு மாற்ற வேண்டும்.
ஊரக வளர்ச்சித் துறை உள்ளாட்சித் தேர்தலைநடத்துவது, உலகின் மிகப்பெரும் சமூகப் பாதுகாப்புத் திட்டமான கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை நிறைவேற்றுவது எனசெயல்படுவதால் இதை சிறப்புத் துறையாக அங்கீகரித்து, தலைமைச் செயலக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் உட்பட 10 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.21ஆம் தேதியன்று மாநில அளவில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது, அதன் தொடர்ச்சியாக பிப்.12ஆம் தேதியன்று சென்னையில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை இயக்குநரகம் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தபோராட்டங்களுக்குப் பிறகும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பிப்.24, 25 தேதிகளில் மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் வளர்ச்சித்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என மாநில பிரதிநிதித்துவப் பேரவை முடிவு செய்துள்ளது. இதன் பிறகும் தீர்வு காணப்படாவிட்டால், காலவரையற்ற வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ச.பாரி, மாநிலச்செயலாளர் ச.ராஜசேகரன், திருப்பூர் மாவட்டச்செயலாளரும், வரவேற்புக்குழுச் செயலாளருமான பி.செந்தில்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.