திருப்பூர்:
பொருளாதார சூழ்நிலை மோசமடைந்திருக்கும் நிலையில், தொழில் முனைவோர் தொழில் செய்ய முடியாமலும், தொழிலாளர்கள் வேலை இழந்தும் சரிவின் விளிம்பில் கோவை,திருப்பூர் நகரங்கள் இருக்கின்றன என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.திருப்பூரில் திமுக முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இல்லத் திருமண விழாவில் வியாழனன்று பங்கேற்ற மு.க.ஸ்டாலின் மணமக்களுக்குத் திருமணத்தை நடத்தி வைத்து, வாழ்த்திப் பேசுகையில் கூறியதாவது:
பொருளாதார சூழல் மோசமாக இருக்கிறது.கொங்கு மண்டலத்தில் தொழில் செய்வோர் தொழில் செய்ய முடியாத நிலையில், தொழிலாளர்கள் வேலை இழப்பைச் சந்திக்கும் நிலை உள்ளது. கோவை, திருப்பூர் தொழில் நகரங்கள் சரிவின் விழிம்பில் இருக்கின்றன. இவற்றை எல்லாம் சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
“சுற்றுலா அமைச்சரவை”
தமிழக முதல்வர் எடப்பாடி வெளிநாடு சென்றிருக்கிறார். முதல்வர் மட்டுமல்ல, அவருடன் இருக்கும் அமைச்சரவையே 10 பேர் போயிருக்கிறார்கள். எனவேதான் நான் அதிமுக அமைச்சரவையை சுற்றுலா அமைச்சரவை என்று சொல்கிறேன். இன்று நாளிதழ்களில் ரூ.2700 கோடி புதிய முதலீடு தமிழகத்துக்கு வருவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக பெரிதாக போடப்பட்டுள்ளது. அதைப் பற்றி அமெரிக்காவில் முதல்வர் பேசியிருப்பதாகவும் வந்திருக்கிறது.
ஆனால் ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது நடத்திய முதலாவது உலக முதலீட்டாளர் மாநாட்டிலும், எடப்பாடி நடத்திய இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டிலும் சேர்த்து 5 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு வந்திருப்பதாகச் சொன்னார்கள். எங்கே, எந்தெந்த நிறுவனங்கள் வந்திருக்கின்றன, எவ்வளவு பேர் வேலைவாய்ப்பு பெற்றனர் என்ற விபரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிடுங்கள் என நான் கேட்கிறேன். இதைக் கேட்டால் நான் முதலீட்டுக்கு, தொழில்
வளர்ச்சிக்கு எதிராகப் பேசுவதாக சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் சொன்னதுபோல் முதலீடுகள் தமிழகத்தில் வந்து தொழில்கள் தொடங்கப்பட்டிருக்குமானால் நாங்களே திமுக சார்பில் முதல்வருக்குப் பாராட்டு விழா நடத்தத் தயாராக இருக்கிறோம். ஆனால் இன்று நாட்டில் இருக்கும் சூழ்நிலையை மூடி மறைக்க, மக்களைத் திசை திருப்பு வதற்காக திட்டமிட்டு இப்படிச் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைமையை மாற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் அளித்த மிகப்பெரிய வெற்றியைப் போல, சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற எங்களுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
இந்த விழாவில் முன்னதாக வாழ்த்திப் பேசியபாஜக தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன், கலைஞருக்குப் பிறகு யார் என்ற கேள்விக்கு தளபதியாக, எங்களை வீழ்த்திய வெற்றித் தளபதியாக திமுக தலைவர் இருக்கிறார், என்று கூறினார். இதைக் கேட்டுவிழாவில் பங்கேற்றோர் பலத்த கரவொலி எழுப்பினர். இதன் பிறகு ஸ்டாலின் பேசும்போது,சி.பி.ராதாகிருஷ்ணன் மனம் திறந்து சொன்னதை திருத்திச் சொல்கிறேன். நாங்கள் வீழ்த்தவில்லை, தோற்கடித்தோம். இன்னும் சொல்லப் போனால் பாஜகவை மக்கள் தோற்கடித்தனர் என்று கூறினார்.இவ்விழாவில் பல்வேறு அரசியல் கட்சியினர் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். மு.பெ.சாமிநாதன் நன்றி கூறினார்.