திருப்பூர், ஏப். 19 - ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 80 வயதைக் கடந்த முதியவர்கள் 15 பேர் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்துவிட்டு வாக்குச்சாவடி முன்பாக மரக்கன்றுகளை நட்டு வைத்து ஆச்சரியப்படுத்தினர். திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டம் ஒழலக்கோயில் ஊராட்சியில் சின்னச்செட்டிப்பாளையம் பள்ளி வாக்குச்சாவடி உள்ளது. இங்கு வியாழனன்று முதியவர்கள் வந்து வாக்களித்தனர். 80 வயதைக் கடந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 15 பேர் வாக்களித்து முடித்த பிறகு இந்த வாக்குச்சாவடி முன்பாக மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.“அடுத்த தேர்தலுக்கு நாங்க இருப்பமோ இல்லையோ தெரியலை.. எங்கள் நினைவாக நாங்கள் வாக்கு செலுத்திய வாக்குச்சாவடி முன்பு மரக்கன்று நட்டு வெச்சிட்டுப் போறோம். 5 வருஷம் கழித்து எங்க எம்.பி இந்த ஊருக்கு என்ன நல்லது பண்ணிருப்பாரோ தெரியாது. ஆனால் நிச்சயமா இந்த மரக்கன்றுகளால் மக்களுக்கு பலன் தரும்.” என்று மிகவும் நெகிழ்ச்சியுடன் அந்த முதியவர்கள் குறிப்பிட்டனர்.