திருப்பூர், ஏப். 26 –திருப்பூரில் சாக்கடை தூர்வாரப்படாததால் சாக்கடையில் இறங்கியும், சாலை மறியலில் ஈடுபட்டும் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 22 ஆவது வார்டு பவானி நகர் பகுதியில் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக சாக்கடை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இந்நிலையில் சாக்கடை தூர்வாரப்படாததால் சாக்கடை நீர் சாலையில் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோய்த் தொற்று ஏற்பட்டு வருவதுடன், துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொது மக்கள் பலருக்கு தொடர்ச்சியாக இருமல், சுவாச கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 5 வருடங்களில் பலமுறை இதேபோல் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பதாக இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.மேலும் போராட்டங்கள் நடத்தும்போது மட்டும் சம்பவ இடத்துக்கு வந்து பிரச்சனையை சரி செய்வதாக கூறிச் செல்லும் அதிகாரிகள் நிரந்தரத் தீர்வு காண முன்வருவதில்லை என்று கூறினர்.இந்நிலையில் மக்கள் பாதுகாப்பு அமைப்பினர் வெள்ளியன்று இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வலியுறுத்தி சாக்கடையில் இறங்கியும், சாலை மறியல் ஈடுபட்டும் போராட்டம் நடத்தினர்.சுமார் 4 அடி வரை ஆழமுள்ள தேங்கியிருந்த சாக்கடை கழிவுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி சமரசம் செய்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோர் இப்போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.