tamilnadu

தமிழகத்துக்கு நீட் தேர்வில் முற்றாக விலக்கு கோரி 37 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்

திருப்பூர், ஜூன் 6 -நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு முற்றாக விலக்களிக்க வேண்டும் என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த 37 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் ஒன்றாக குரல் கொடுப்போம் என்று திருப்பூர் தொகுதிஎம்.பி. கே.சுப்பராயன் கூறினார்.நீட் தேர்வில் தோல்வி அடைததால் தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ உடலுக்கு வியாழக்கிழமை மலர் அஞ்சலி செலுத்திய பின் கே.சுப்பராயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது மிகுந்த வேதனை அளிக்கிறது. நீட் தேர்வின் மூலம் இன்னும் எத்தனை தமிழ் மகள்களைப் பறிகொடுக்கப் போகிறோமோ?பாரதிய ஜனதாவின் வர்ணாசிரம கொள்கை அடிப்படையில் வடிகட்டும் முறைதான் இந்த நிலைக்குக் காரணம். நால் வர்ணங்களில் மேல்வர்ணம் மட்டுமே கல்வி கற்க வேண்டும், எல்லா பதவிகளையும் பெற வேண்டும் என்றும், மற்ற வர்ணத்தைச் சேர்ந்தோர் கல்வி உரிமை பெறாமல் மேல் வர்ணத்தாருக்கு கீழே இருந்துஅவர்களுக்கு எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் தான் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இது இந்தி பேசாத மக்களுக்கு எதிரானது.தமிழகத்தை வஞ்சிக்கும் அடிப்படையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு மறுக்கிறது. எனவே தமிழகத்தைச் சேர்ந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் 37 எம்.பி.க்கள் தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் ஒன்றாக குரல் கொடுப்போம்.அதேசமயம் நீட் தேர்வில் வாய்ப்பு பறிபோவதை எதிர்த்துப் போராடுவதற்கு மாணவர்கள் முன்வர வேண்டும், விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்வது தீர்வைத் தராது. இவ்வாறு கே.சுப்பராயன் கூறினார்.