அவிநாசி, மே 30-அவிநாசி அடுத்த ஆலத்தூரில் தனியார் நிறுவன வாகன ஓட்டுநரை அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்புசாமி, சரமாரியாக தாக்கியும், தகாத வார்த்தையால் திட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவிநாசி ஒன்றியம், ஆலத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சுசி என்ற தனியார் நிறுவனத்தின் வாகனத்தின் ஓட்டுநராக மகிமைராஜ் உள்ளார். இவர் செவ்வாயன்று நிறுவனத்தின் பணியாளர்களை அழைத்துக் கொண்டு வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆடுகள் மீது வாகனம் மோதியது. இதனைகண்ட அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்புசாமி, ஓட்டுநர் மகிமைராஜை ஆபாசமாகவும் திட்டியும், தாக்கியும் உள்ளார். இதன்பின் வாகனத்தில் வந்த பெண்களும், பொதுமக்களும் சமரசம் செய்து வைத்தனர். இந்நிலையில் வியாழனன்று வழக்கம் போல ஓட்டுனர் மகிமைராஜ் ஆலத்தூர் வழியாக நிறுவனத்தின் பணியாளர்களை வாகனத்தில் அழைத்துக் கொண்டு வந்துள்ளார். அப்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்புசாமி வாகனத்தை தடுத்து நிறுத்தி இவ்வழியாக வரக்கூடாது என கூறியுள்ளார். மேலும் ஆபாச வார்த்தைகளால் திட்டியும், தாக்கவும் முயற்சித்துள்ளார். இதையடுத்து மகிமைராஜ் நிறுவனத்தின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து முப்பதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் சேவூர் காவல் நிலையத்தில் திரண்டனர். இதன்பின் நிறுவனத்தின் உரிமையாளர் நந்தகுமார், ஓட்டுநர் மகிமைராஜ் ஆகியோர் சேவூர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து சேவூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.