திருப்பூர், ஏப். 2 -
விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்படுத்தாமல், அதை திசை திருப்பக்கூடிய விதத்தில் ஐந்தாண்டு காலம் வாய்ப்பந்தல் போட்டவர்தான் பிரதமர் மோடி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. கூறினார்.கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதி பொங்கலூர் ஒன்றியம் கொடுவாய் கிராமத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரக் கூட்டம் செவ்வாயன்று மாலை நடைபெற்றது.திமுக ஒன்றியச் செயலாளர் அசோகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது: 30 ஆண்டுகளுக்கு முன்பே விவசாயிகள் விளைநிலத்துக்கு மதிப்பில்லாமல் போனது. விவசாய நெருக்கடியைத் தீர்ப்பதற்கு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகளை அமல்படுத்துவேன், விவசாயிகள் விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு விலை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பேன் என்று 2014ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் மோடி வாக்குறுதி அளித்தார்.ஆனால் நாடாளுமன்றத்தில் கடந்த ஐந்தாண்டு காலத்தில் இப்பிரச்சனை மீது கேள்வி எழுப்பினால் பிரதமர் மோடி நேரடியாக இதற்கு பதில் சொல்லாமல் விவசாயிகள் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவேன், மூன்று மடங்கு ஆக்குவேன் என்று வாய்ப்பந்தல் போடுவார்.விவசாய நெருக்கடி காரணமாக மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருக்கிறது. இங்குள்ள கடை வீதிகளில் வியாபாரிகளிடம் கேட்டாலே வருமானம் குறைந்திருப்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை தருவேன் என்று சொன்ன மோடி ஒரு 50 லட்சம் வேலையாவது கொடுத்திருக்கிறாரா? இருக்கும் வேலையையும் பறித்ததுதான் நடந்தது. புதிய தொழிலும் வரவில்லை, பழைய தொழிலும் முடங்கியது.மோடி அரசு தொடர்ந்தால் பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, ஜனநாயகரீதியாகவும் ஆபத்து. வாக்குறுதியை நிறைவேற்றாதது பற்றி மோடி பேசுவதே இல்லை. மாறாக எல்லையில் மிகப்பெரிய ஆபத்து என்று பேசி திசை திருப்புகிறார். மற்ற கட்சிகளுக்கெல்லாம் தேசபக்தியே இல்லை என்பது போல் பேசுகிறார். ரூபாய் மதிப்பு நீக்கப்பட்டபோது தீவிரவாதத்தை ஒழிப்பதாகச் சொன்னார். பிறகு எப்படி காஷ்மீர் புல்வாமாவில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. உள்நாட்டில் தீவிரவாதம் வளர்வதற்கு மோடி அரசே காரணமாக இருக்கிறது. முந்தைய காலத்தைவிட மோடி ஆட்சியில் தீவிரவாத தாக்குதல் அதிகரித்திருக்கிறது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உ.பி.யில் ஒரு ஆண்டுக்கு செலவு செய்ய வேண்டிய தொகையை காஷ்மீர் மாநிலத்தில் காவல்துறை, ராணுவம், ஆயுதங்களுக்கு என ஒரு மாதத்தில் செலவு செய்யும் நிலை உள்ளது. ஒரு மாநிலத்தையே அழித்துவிட்டது இந்த அரசு. அதேபோல் தமிழகமும் பாஜக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்டது. நம்முடைய மாணவர்கள் எதிர்காலத்தில் மருத்துவப் படிப்பு படிக்க வேண்டுமென்றாலே நீட் தேர்வை நீக்க வேண்டும், அதற்கு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற வேண்டும்.இவ்வாறு டி.கே.ரங்கராஜன் கூறினார்.முன்னதாக இக்கூட்டத்தில் கொமதேக சார்பில் பரமேஸ்வரன், உஉக சார்பில் நடராஜ், காங்கிரஸ் சார்பில் தியாகராஜன், மதிமுக சார்பில் பாலு, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் உரையாற்றினர். முடிவில் பொங்கலூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் சிவசாமி நன்றி கூறினார்.