tamilnadu

img

நம்புங்கள்,.... நான் ஒரு விவசாயி

நிச்சயமாய் நம்புங்கள்
நான் ஒரு விவசாயி
விவசாயத்திற்கு விடை கொடுக்க
கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்க
முத்தான மூன்று சட்டங்கள்
கொரோனா கொடூரத்திலும் சட்டங்கள்
விவசாயிகளின் மேல்
வற்றாத பாசம் மோடிக்கு
முற்றாக ஆதரித்த எடப்பாடி
என்னை நிச்சயமாய் நம்புங்கள்
நான் விவசாயி

எனது விவசாய நிலத்திலிருந்து
சென்னைப் பட்டிணம்
சொன்ன இரண்டரை மணி நேரத்தில்
சன்னமாய் பயணிக்கலாம்
என்னமாய் வகுத்தேன்‌ எட்டுவழிச்சாலை
இதை எதிர்ப்பதோ விவசாயிகளின் வேலை?
நிச்சயமாய் நம்புங்கள்
நான் ஒரு விவசாயி

மீத்தேன் எரிவாயு
ஹைட்ரோ கார்பன் நியூட்ரினோ
விதவிதமாய் நவீன மயம்
பதம் பதமாய் தமிழகம் 
தகத்தகாயம் ஆகாதோ?
நிதம்நிதமாய் எதிர்ப்பதே
காவிரிப் படுகை
விவசாயிகளின் வேலையா?
நிச்சயமாய் நம்புங்கள்
நான் ஒரு விவசாயி

முத்துநகரில் முத்தான
தன்னிகரிலாத் தாமிர ஆலை
விரிவாக்க ஏற்பாடுகளை
சரியாகச் செய்ததை
எதிர்க்கலாமோ எல்லாம் சேர்ந்து
வகுக்கலாமோ நூறு நாள் போர்
திகைக்கலாமோ துப்பாக்கிச் சூட்டுக்கு?
நிச்சயமாய் நம்புங்கள்
நான் ஒரு விவசாயி

உயர் மின் கோபுரம்
அயர்விலாது சுமக்கும் மின்சாரம்
மாநிலங்களுக்கிடையிலான பாலம்
துண்டு நிலம் விட மனமிலாமல்
விவசாயிகள் போடலாமோ ஏலம்?
நிச்சயமாய் நம்புங்கள்
நான் ஒரு விவசாயி

தலைப்பாகை கட்டி
நிலையான வேளாண்மை
என்னைப்போல் யாரேனும்
கண்ணான விவசாயம்
பார்த்த முதல்வரைக் காட்டுங்கள் பார்ப்போம்

விவசாயி எனக்குத் தெரியாதா
விவசாயியின் கஷ்டம்?
உழுபவன் கணக்கு 
உதவாதது
உழுகோலுக்கும் மிஞ்சாதது
ஆதலினால் 
கணக்குப் பார்க்காதீர்கள்
பிணக்கு வேண்டாம்
கர்மாவைச் செய்
பலனை எதிர்பாராதே
சும்மாவா சொன்னார்
நம்மவர் பரமாத்மா
மறு அவதாரமாய் நாடாளும்
திருவுருவானவர்
விவசாயிகளுக்கு ஒன்றரை மடங்கு
பயன்கிட்ட பாடுபடும் பிரதமர்
அவர் வழி என் வழி

இப்போது சொல்லுங்கள்
தப்பேதுமில்லாமல்
நான் ஒரு விவசாயி

===-பெரணமல்லூர் சேகரன்===