tamilnadu

img

விடைத்தாள் திருத்திய சம்பளம் ஓராண்டாக நிறுத்தி வைப்பு ஆசிரியர்கள் போராட்டத்தால் பணிந்தது கல்வித்துறை

திருப்பூர், ஏப். 4 -

திருப்பூரில் விடைத்தாள் திருத்தும் பணிக்குத் தர வேண்டிய சம்பளம் ஓராண்டாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வந்த ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உடனடியாக நிலுவைச் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டது.திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணியில் 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் வியாழனன்று காலை இங்கு வந்த ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை நிறுத்திவிட்டு பள்ளி வளாகத்துக்கு உள்ளேயே திடீரென புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விபரம் கல்வித்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் காவல் துறையினர் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர்.இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்கள் ஆசிரியர்களிடம் கேட்டபோது, கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய சம்பளம் ஓராண்டு காலமாக தராமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், இது பற்றி மாவட்ட கல்வி அலுவலரிடம் பல முறை வலியுறுத்தியும் சம்பள நிலுவை வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.


குறிப்பாக ஒரு விடைத்தாள் திருத்துவதற்கு ரூ.6 வீதம் நாளொன்றுக்கு 30 விடைத்தாள்கள் திருத்த வேண்டும். அதற்கு ரூ.180 மற்றும் தொலை தூரத்தில் இருந்து வரும் ஆசிரியர்களுக்குப் பயணப்படி ரூ.150 சேர்த்து ரூ.330 நாளொன்றுக்கு வழங்கப்பட வேண்டும். கடந்த ஆண்டு விடைத்தாள் திருத்தும் பணியில் பல நாட்கள் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பளம், பள்ளிக் கல்வித் துறையில் இருந்து வந்தபிறகும், மாவட்ட கல்வி அலுவலர்களால் தரப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.இந்நிலையில் மாவட்ட கல்வி அலுவலர் கனகமணி, அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். கடந்த ஆண்டு நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்கினால் மட்டுமே விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவோம் என ஆசிரியர்கள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். இதையடுத்து 360 ஆசிரியர்களுக்கு சேர வேண்டிய ரூ.4 லட்சத்து 25 ஆயிரத்தை உடனடியாக வங்கியில் இருந்து எடுத்து வந்து ஆசிரியர்களுக்குப் பிரித்து வழங்கினர். இதையடுத்து மூன்று மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்த விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் பின்னர் தொடர்ந்தனர்.