tamilnadu

கல்வி உரிமை சட்டத்தில் சேர்த்த குழந்தைகளுக்கு அனுமதி மறுப்பு திருப்பூரில் பெயர் மாற்றம் செய்த பள்ளி மீது விசாரணை

திருப்பூர், மே 7 – திருப்பூர் எம்.எஸ்.நகரில் தனியார் பள்ளி ஒன்றின் பெயர் மாற்றம் செய்யப்பட்டதைக் காரணம் காட்டி, கல்வி உரிமைச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட 80 குழந்தைகளுக்கு வரும் கல்வியாண்டுக்கான சேர்க்கை அனுமதியை அப்பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. கட்டணம் செலுத்த வேண்டும் என பெற்றோர்களை வற்புறுத்தி உள்ளது. இது குறித்து விசாரணை செய்து அறிக்கை தருமாறு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளது.அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் எம்.எஸ்.நகரில் உள்ள விகாஸ் வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் 80 குழந்தைகள் சேர்க்கப்பட்டு படித்து வந்தனர். அவர்கள் வரும் கல்வியாண்டில் பள்ளியில் தொடர்ந்து படிப்பதற்கு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிர்வாகம் கூறியுள்ளது. கட்டணம் செலுத்தாவிட்டால் குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அப்பள்ளியில் படிக்கும் குழந்தையின் பெற்றோர் வெங்கடேசன் என்பவர் மாநில மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகத்துக்குப் புகார் அனுப்பி உள்ளார். இந்த புகார் கடிதத்தில் விகாஸ் வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, விகாஸ் ஜூனியர் மெட்ரிகுலேஷன் பள்ளி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதைக் காரணம் காட்டி குழந்தைகளை வரும் கல்வியாண்டில் சேர்க்க மறுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.80 குழந்தைகளுக்கு இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து விசாரித்து அறிக்கை அனுப்பும்படி திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.