tamilnadu

நீட் தேர்வை கைவிடுக! மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருப்பூர், ஜூன் 6 -நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவிகள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டாலும் கூட, உண்மையில் மத்திய பாரதிய ஜனதா அரசின் கல்விக் கொள்கையால் நடத்தப்பட்ட படுகொலைகளே இவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவதற்கு அனுமதிக்காமல் மத்திய அரசு தமிழகத்தில் பிடிவாதமாக நீட் தேர்வை நடத்தி வருகிறது. இதனால் தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவு தகர்க்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன.இனியும் காலதாமதம் செய்யாமல் நீட் தேர்வில் விலக்கு கோரிதமிழக அரசு அனுப்பிய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற மத்திய அரசு உடனடியாக அனுமதிப்பதுடன், மாநில அரசும் வலியுறுத்த வேண்டும். மோடி அரசுடன், எடப்பாடி அரசும் கூட்டு சேர்ந்து சதி செய்வதால்தான் இந்நிலை நீடிக்கிறது. எனவே நீட் விலக்கு கோரி தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், மாணவர்கள், பல்வேறு சமூக நல அமைப்புகளைச் சேர்ந்தோர் மீண்டும் ஒன்றுபட்டு களம் காண முன்வர வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் செ.முத்துக்கண்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.