tamilnadu

img

மக்கள் மீது வரி மேல் வரி போட்டவர்களைத் தோற்கடியுங்கள்

 திருப்பூர், ஏப். 2-


மக்கள் மீது வரி மேல் வரி போட்டவர்களைத் தோற்கடிக்க திமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கே.சுப்பராயன் வேண்டுகோள் விடுத்தார்.திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் கே.சுப்பராயன் திங்களன்று திருப்பூர் மாநகரம் காவிலிபாளையம் புதூர் பகுதியில் இருந்து தன்னுடைய வாக்கு சேகரிப்பு பிரச்சார பயணத்தை மேற்கொண்டார். அங்கிருந்து ரங்கநாதபுரம், கொங்கணகிரி, சரளக்காடு, காலேஜ் ரோடு, ஓடக்காடு, முருங்கப்பாளையம், சிறுபூலுவப்பட்டி வழியாக வேலம்பாளையம் பகுதி வரை சென்றார். மாலை புதுக்காலனி, திலகர் நகர், தண்ணீர் பந்தல், அனுப்பர்பாளையம், பெரியார் காலனி, அண்ணா காலனி, குமாரானந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், கொமதேக, விசிக, திக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் உடன் சென்றனர். இந்த பயணத்தின்போது வேட்பாளர் கே. சுப்புராயன் பேசும்போது, தற்போது மத்திய மாநில அரசுகள் மக்கள் மீது வரி மேல் வரியாகப் போட்டு வதைத்துக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை போட்டு மக்களை நெருக்குகிறது. மாநில அரசு சொத்துவரியை பன்மடங்காக உயர்த்தி மக்களின் குரல்வளையை நெரிக்குகிறது.



வீட்டு வரிபன்மடங்காக உயர்ந்துள்ளது. மாட்டின் மடியில் பால் கறந்து குடிக்கலாம். ஆனால் எடப்பாடி அரசோ மாட்டின் மடியையே அறுத்துக் குடிக்கிறது. எடப்பாடி அரசும் மோடி அரசும் மக்கள் மீது வரி மேல் வரி போட்டு நாட்டையே சுடுகாடாக்கி கொண்டிருக்கிறது. எனவே இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.மோடி மீண்டும் வெற்றி பெற்றால் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசி ரத்து செய்யப்படும். நாடு முழுதும் உள்ள ரேஷன் கடைகள் மூடப்படும். ரேஷன் கடைகளை மூடிவிடவேண்டும் என்பது அவர்கள் கொள்கை. இது உலக வங்கியின் நிர்பந்தம். இதற்கு மோடி அரசு பணிந்து இருக்கிறது. மக்கள் வெளிமார்க்கெட்டில் தான் பொருட்களை வாங்க வேண்டும். உணவுப் பொருட்களுக்கு கொடுக்கிற மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உலக வங்கியின் நிபந்தனை. அதை மோடி ஏற்றுக் கொண்டு இருக்கிறார். 414 ரூபாய்க்கு விற்ற சமையல் கேஸ் இன்றைக்கு 950 ரூபாய்க்கு மேல் போய்விட்டது. இவர்களை அதிகாரத்திற்கு கொண்டு வந்தது ஏழை மக்களுக்கு உதவி செய்யவா? அல்லது ஏழை மக்களின் கழுத்தில் சுருக்கு கயிறு போட்டு இறுக்கவா? மோடி முன்வைத்திருக்கிற கொள்கை அந்நிய நேரடி முதலீடு இந்தியாவில் குவிவதற்கு உரிய சூழலை உருவாக்குவது தான். இதுதான் எங்கள் கொள்கை என்று அவரே சொல்லியிருக்கிறார். சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நேரு காலத்திலிருந்து காப்பாற்றப் பட்டு வந்தது. அது மோடியின் காலத்தில் அழிக்கப் பட்டு வருகிறது. விலைவாசி உயர்வுக்கு மோடி அரசும், அதன் கொள்கைகளும்தான் காரணம்.எனவே, ஏழைகள் வாங்கிய கடனை அடியாட்களை வைத்து வசூலிக்கும் மோடி அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை மேல் சலுகைகள் வழங்கி வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 30 சதவிகிதமாக இருந்த வரியை, மோடி காலத்தில் 25 சத விகிதமாக குறைத்திருக்கிறார்கள். மோடி நாடாள தகுதியற்றவர்.மோடியும் எடப்பாடியும் வீழ்த்தப்பட வேண்டியவர்கள். அவர்கள் மக்களுக்கானவர்கள் அல்ல. அவர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானவர்கள். அவர்களை வீழ்த்த வேண்டும். எனவே, கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று சுப்பராயன் வாக்கு சேகரித்தார்.