tamilnadu

img

அவிநாசி : சூறாவளி காற்றால் கோழிப்பண்ணை, வீடுகள் இடிந்து சேதம்

அவிநாசி, ஏப்.28- அவிநாசி பகுதியில்  திடீரென வீசிய பலத்த சூறாவளி காற்றில் கோழிப்பண்ணைகள், வீடு, மின்கம்பங்கள் சரிந்து சேதமடைந்தன.

அவிநாசியில் கடந்த  இரண்டு நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இக்காற்றினால் சேவூர் அருகே முதலிபாளையத்திலிருந்து வடுகபாளையம் செல்லும் சாலையில் மாரப்பம்பாளையத்தில் ஆறு மின் கம்பங்கள் அடுத்தடுத்து சரிந்து விழுந்தது. இதனால் வடுகபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகள் இருளில் மூழ்கியது. இதே போல், அதே சாலையில் உள்ள தோட்டத்தில் வசித்து வரும் செல்வராஜ் என்பவரின்  தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வீட்டின்  மேற்கூரை,  பந்தல் ஆகியவை காற்றில் தூக்கி வீசப்பட்டது. மேலும் மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன. இதேபோல் அருகில்  உள்ள சிவசாமி என்பவர் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 30 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் போர் காற்றில் பறந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயி சிவசாமி வேதனையுடன் தெரிவித்தார்.

 கோழிப்பண்ணை நாசம் 

நடுவச்சேரிகிராமம் : மாரப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (55). இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது தோட்டத்தில் கோழிப்பண்ணை  அமைத்து கோழிகள் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் பலத்த காற்றுடன் பெய்த மழையில் கோழிப்பண்ணை முழுவதும் சாய்ந்தது.
இது குறித்து விவசாயி கணேசன் கூறியதாவது, காற்றுடன் மழை பெய்ய துவங்கியது. மழை பெரிய அளவில் இல்லை. ஒரு கட்டத்தில் திடீரென சூறாவளி காற்று ஒன்று சூழட்டியது. அப்போது கண் இமைக்கும் நேரத்தில் எனது கோழிப்பண்ணை அதே இடத்தில் அப்படியே சாய்ந்து விட்டது. கோழிப்பண்ணையில் 2600 கோழிகள் இருந்தன. இதனால் சுமார் ரூ .6 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது  என்றார்.

இதேபோல் , இவரது தோட்டம் அருகே வசித்து வருபவர் கந்தசாமி மகன் தங்கராஜ். இவரும் கோழிப்பண்ணை வைத்து கோழிகள் வளர்ந்து வருகிறார். இவரது கோழிப்பண்ணையும் காற்றில் சரிந்து விழுந்தது. மேலும், இவரது கோழிப்பண்ணை அருகே சுப்பிரமணி என்பவரது தோட்டத்தில் 9 தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது.