tamilnadu

img

காங்கேயத்தில் அம்பேத்கர் கல்வி, வேலை வாய்ப்பு இலவச பயிற்சி மையம் தொடக்கம்

திருப்பூர், மே 20 -திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இலவச பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது. காங்கேயம் திருநீலகண்டர் வீதியில் உள்ள தனியார் தோட்டத்தில் ஞாயிறன்று இதன் தொடக்க விழா நடைபெற்றது. இப்பயிற்சி மையத்தை துவக்கி வைத்துகாங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் உ.தனியரசு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கு பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளரும், வழக்கறிஞருமான ந.நவீன் தலைமை ஏற்றார். எம்.வினிதா வரவேற்றார்.இந்நிகழ்ச்சியில் பயிற்சி வகுப்புகள் சம்பந்தமான அறிமுக உரையை அம்பேத்கர் பயிற்சி மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் க.கணேஷ் மற்றும் கோவை மாவட்ட அம்பேத்கர் பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் செல்வா ஆகியோர் வழங்கினர். திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் ஏ.நிசார் அகமது, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆர்.குமார், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அரங்கநாதன், டி.என்.பி.டி.எஃப். ஆசிரியர் ஏ.பிரபு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மேலும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த ஆசிரியர்கள் பானு ஸ்ரீ கார்த்திகா, வெங்கடேஸ்வரன், பிஎஸ்என்எல் செல்லமுத்து, யோகா ஆசிரியர் காளியப்பன், தங்கவேல், நாச்சிமுத்து, சுபாஷ், சுரேஷ், சிபி, கார்த்திக், முருகன், விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவ மாணவியருக்கு, அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களைக் கொண்டு அரசுத் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி), வங்கி, ஆசிரியர், ரயில்வே, போட்டித் தேர்வுகள், நுழைவுத்தேர்வுகள் போன்ற தேர்வுகளுக்கு இங்கு இலவசமாக பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.