திருப்பூர் மாவட்டத்தில் சமீப காலமாக மோட்டார் வாகன விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற விபத்துகளைத் தவிர்ப்பதற்கும், உயிரிழப்புகளையும், படுகாயங்களையும் தடுக்கவும் ஆக்கப்பூர்வ முயற்சிகள் மேற்கொள்ளாமல் மாவட்ட நிர்வாகம் சம்பிரதாயப்பூர்வ நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது.தொழில் நகரமான திருப்பூரில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ஒன்றரை லட்சத்திற்கு மேல் உள்ளன. நெருக்கடிமிக்க இந்நகரில் சாலை வசதிகள் போதுமானதாக இல்லை. போக்குவரத்து விதிமுறைக்கு மாறாக, நடைபாதைகளே இல்லாத நெடுஞ்சாலைகள்தான் திருப்பூரில் இருக்கின்றன. இதுதவிர தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளூர், கிராமப்புற சாலைகளும் நன்கு வடிவமைக்கப்பட்டதாக இல்லை. போக்குவரத்து குறியீடுகள், பாதுகாப்பு வளைவுகள், தடுப்பரண்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. சாலைகள் நிலையும், போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றாமல் இயக்கப்படும் வாகனங்களும் விபத்துகள் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கின்றன.குறிப்பாக கடந்த நான்கைந்து நாட்களில் திருப்பூர் மாநகர, மாவட்ட காவல் துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட விபத்துகள் எண்ணிக்கை மட்டும் 11. இதில் உயிரிழந்தவர் ஒருவர், படுகாயம் அடைந்தோர் 13 பேர். இதுதவிர காவல் துறை வழக்குப் பதிவு செய்யாமல் விட்ட விபத்துகள் எண்ணிக்கை இதைவிடக் கூடுதலாக இருக்கும்.அண்மை நாட்களில் நடைபெற்ற விபத்துகள் விபரம் வருமாறு: திருப்பூர் பல்லடம் மாதப்பூரில் கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற மயில்சாமி (வயது 55) வெள்ளியன்று காலமானார். இது தவிர திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கரைப்புதூர் சின்னக்கரை சாலையில் நான்கு நாட்களுக்கு முன் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பல்லடம் செட்டிபாளையம் சாலை முத்தாண்டிபாளையம் பிரிவில் காரும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் மகேந்திரன் என்பவர் காயமடைந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் செல்லும் சாலை பத்ரகாளிப்புதூரில் ஜீப்பும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டதில் இருவர் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதேபோல் உடுமலை மூணாறு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சாலையில் நடந்து சென்றவர் மீது மோதியதில் கிட்டுசாமி (வயது 70) என்ற முதியவர் காயமடைந்து உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.குண்டடம் சாலை உப்பாறு அணை வாய்க்கால் மேடு பகுதியில் நடந்து சென்ற சின்னதுரை (27) என்ற இளைஞர் மீது கிரேன் வாகனம் மோதியதில் காயமடைந்து தாராபுரம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.அதேபோல் காங்கேயம் அருகே கோவை திருச்சி சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தாயும், மகனும் படுகாயம் அடைந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த சில நாட்களில் ஏற்பட்ட விபத்துகள் இவை. இதுதவிர மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரு நாட்களில் மட்டும் நான்கு மோட்டார் வாகன விபத்துகள் நடைபெற்றுள்ளன. காங்கேயம் சாலையில் நடந்து சென்ற பஷீர் (55) என்பவர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் அவர் காயமடைந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.வியாழனன்று திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்து தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.பாண்டியன்நகர் பகுதியில் அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் மோதியதில் மற்றொரு வாகனத்தில் வந்த ஷான் பாஷா (31) என்பவர் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதேபோல் வஞ்சிபாளையம் நொய்யல் ஆற்றுப் பாலம் அருகே இரு சக்கர வாகனங்கள் இரண்டு மோதிக் கொண்டதில் விக்னேஷ் (26) என்ற இளைஞர் படுகாயம் அடைந்து கோவை தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.இவ்விபத்துகளில் உயிரிழப்பு இல்லாதநிலையில், சிறுவிபத்து வழக்குகளாகப் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் விபத்துகளில், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரில் கை, கால் எலும்பு முறிவு, முதுகுத் தண்டுவடம் பாதிப்பு, தலைக் காயம் ஆகியவற்றால் உடல் உறுப்புகள் முடங்கி மாற்றுத் திறனாளிகளாக மாறுவோர் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. மிக சொற்பமானவர்கள் மட்டுமே முழுமையாக குணமடைகின்றனர். இதுதவிர படுகாயம் அடைந்தவர்களில் குறிப்பிட்ட கால சிகிச்சைக்குப் பிறகும்கூட சிலர் மரணமடைவதும் உண்டு. இவை உயிரிழப்பு விபத்து வழக்குகளாக மாற்றப்படுவதில்லை. இவற்றையும் கணக்கில் கொண்டால் மனித இழப்புகள் அதிகமாக இருக்கும்.கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வ புள்ளிவிபரப்படி 2000க்கும் மேற்பட்ட விபத்துகளில் 497 பேர் உயிரிழந்தனர். ஆனால் மேற்சொன்னபடி நிகழும் உயிரிழப்புகள் இதில் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. அதையும் கணக்கில் கொண்டால் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். ஆக ஒவ்வொரு ஆண்டும் இந்த மாவட்டத்தில் விபத்துகளில் மனித இழப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.இதுபோன்ற விபத்துகளையும், மனித இழப்புகளையும் அறிவியல்ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தி இவற்றைக் கட்டுப்படுத்தி, தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகமோ, காவல் துறையோ முறையான ஆய்வுக்கு தயாராக இல்லை என்பதையே அவர்களது செயல்பாடுகள் காட்டுகின்றன.குறிப்பாக ஆண்டுக்கு ஒரு முறை சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா மட்டுமே அரசுத்தரப்பில் முன்னெடுக்கும் நடவடிக்கை ஆகும்.
இதுதவிர போக்குவரத்து கட்டுப்பாடு காவல்துறையின் மூலம் வாகன சோதனை என குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர், உரிமம் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள், அதிக பாரம் ஏற்றிச் செல்லுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இத்தகைய தொடர் சம்பிரதாய நடவடிக்கைகளால் மட்டும் விபத்துகளை கட்டுப்படுத்தவோ, உயிரிழப்புகளை தடுக்கவோ முடியாது என்பதே பல ஆண்டுகளாக தொடரும் அனுபவ உண்மையாக உள்ளது. கவனக்குறைவு, அதிக வேகம் காரணமாகத்தான் பெரும்பாலான விபத்துகள் நடைபெறுகின்றன என்று சொல்லி, ஓட்டுநர்கள் மீது மொத்த குற்றத்தையும் சுமத்திவிட்டு இவ்விஷயத்தை முடித்துக் கொள்ளவே அரசு நிர்வாகம் முயற்சிக்கிறது.ஆனால் மொத்தமுள்ள வாகனங்களுக்கும், சாலையின் அளவுக்கும் உள்ள விகிதம், இம்மாவட்டத்தில் குறிப்பாக திருப்பூரில் பின்னலாடை தொழில் நகரத்தில் தொழிற்சாலைகளும், குடியிருப்பும் கலந்திருக்கும் நிலை, கிராமப்புறங்களில் பரவி இருக்கும் தொழிற்சாலைகள், விசைத்தறி கூடங்கள் ஆகியவற்றில் இருக்கும் சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றின் தன்மை உள்பட பல்வேறு போக்குவரத்து சார்ந்த காரணிகளையும் கவனித்து ஆய்வு செய்து, சாலைகளை பயன்படுத்தவும், விபத்துகளைத் தடுக்கவும் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை வகுக்க வேண்டும். குறிப்பாக நெடுஞ்சாலைத்துறை, வட்டாரப் போக்குவரத்து துறை, காவல் துறை, மருத்துவத் துறை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. ஆனால் அரசுத் துறைகளுக்கு இடையே எவ்வித ஒருங்கிணைப்பும் இல்லை என்பதே தற்போதைய நிலை.
விபத்துகளால் ஏற்படும் மனித இழப்புகளும், அது சார்ந்து பல குடும்பங்களுக்கு ஏற்படும் இழப்புகள், பாதிப்புகள், அவை பொருளாதாரரீதியாக தனிப்பட்ட குடும்பங்களுக்கும், சமுதாயத்துக்கும் ஏற்படுத்தும் இழப்புகள் பற்றியெல்லாம் மேலைநாடுகளில் விரிவான ஆய்வும், விபத்து தடுப்பும் முக்கிய விஷயமாக கவனத்தில் கொண்டு செயல்படுகின்றனர். ஆனால் இங்கே அத்தகைய நிலை இல்லை.விபத்து, மனித இழப்புகள் தனியார் மருத்துவமனைகளின் கொள்ளை லாபத்திற்கான வாய்ப்பாகவும், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் மூலம் ஆதாயம் அடைய நடைபெறும் அவலமான போட்டிகள் என இங்கு மோசமான நிலையே உள்ளது. இவை சமூகம் சார்ந்த பிரச்சனையாக அணுகும் நிலை இல்லை.இவை திருப்பூர் மாவட்டம் மட்டும் சார்ந்த பிரச்சனை இல்லை, ஏறத்தாழ தமிழகத்திலும் இன்னும் சொல்லப் போனால் விரிவடைந்துவரும் நகர்ப்புறங்களைக் கொண்ட இந்தியா எங்கும் சந்திக்கும் பிரச்சனைகளாக உள்ளன.எனவே விபத்துகளையும், மனித இழப்பையும் முற்றாக தடுக்க முடியாவிட்டாலும், கணிசமாகக் குறைப்பதற்கு சமூகம் சார்ந்த பார்வையுடன் அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் ஆகும். அரசு நிர்வாகம் கவனிக்குமா?