திருப்பத்தூர்:
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்திலும் கிசான் சம்மன் திட்டத்தில் ரூ.75.24 லட்சம் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.நாடு முழுவதும் விவசாயிகளுக்காக மத்திய அரசு ஆண்டுக்கு 6,000 ரூபாயை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 3 தவணைகளாகச் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் இந்தத் திட்டத்தில் விவசாயிகள் அல்லாத சிலர் போலியாக, சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, போலியாக இத்திட்டத்தில் சேர்ந்தவர்களிடம் இருந்து பணத்தைத் திரும்பப் பெறும் முயற்சியில் அதிகாரிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். மேலும், முறைகேட்டில் ஈடுபட்டுள்ள நபர்கள் குறித்து வேளாண்மை அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் மாவட்டத்தில் கிசான் சம்மன் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சுமார் 3,700 விவசாயிகள் அல்லாதவர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு ரூ.1.20 கோடி வரை பண மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
அதேபோல, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்தத் திட்டத்தில் விவசாயிகள் அல்லாத 2,816 பேர் இணைக்கப்பட்டு ரூ.1.12 கோடி வரை பணம் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் இதுவரை ரூ.45 லட்சம் பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை வசூலிக்கும் பணியில் வேளாண்மை மற்றும் வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்திலும் கிசான் சம்மன் திட்டத்தில் மோசடி நடந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தகுதியில்லாத 1,961 பேர் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டு 75 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, முறைகேடாகப் பெற்ற தொகையில் இருந்து இதுவரை ரூ.46 லட்சத்து 2,000 திரும்பப் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை வசூலிக்கும் பணியில் வேளாண்மைத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதில், கந்திலி, ஆலங்காயம், மாதனூர் போன்ற ஒன்றியங்களில் இருந்து அதிக மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து திருப்பத்தூர் வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறும்போது, “திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளில் ஏறக்குறைய 2,000 பேர் 2 தவணைகளில் பணம் பெற்றுள்ளனர். இதுகுறித்து நகர காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகார் அளிக்கப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து சிபிசிஐடி காவல்துறையினர் நடத்தி வரும் விசாரணையில் இதுவரை ரூ.46.2 லட்சம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை வசூலிக்க வேளாண்மைத் துறை அதிகாரிகள் தலைமையில் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது” என்றனர்.