திருநெல்வேலி:
குறிப்பிட்ட சித்தாந்தத்தைப் பரப்பவே தேசிய கல்விக்கொள்கையை மோடி அரசு ஆயுதமாக பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள புனிதசேவியர் கல்லூரியில் கல்லூரிப்பேராசிரியர்களுடன் ஞாயிறன்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:நம்முடைய கல்வி முறை என்பது நமது ஆசிரியர்களால், நமது மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. கல்வி முறையில் ஏதாவது ஒரு கொள்கையைச் சேர்க்க வேண்டுமென்றால், அதற்கு முன்னதாக மாண வர்களிடமும், ஆசிரியர்கள், பேராசிரியர்களிடமும் ஆலோசனைகளையும், கருத்துகளையும் கேட்க வேண்டும். ஆனால்,துரதிர்ஷ்டமாக, தேசிய கல்விக்கொள்கை, ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்துகளைக் கேட்கா மல் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் புதிய கல்விக்கொள்கையில் இருக்கும்சாதகமான அம்சங்கள், காரணங்களோடு நெகிழ்வுத் தன்மையோடு இருந்தால், ஏற்கலாம். ஆனால், தேசிய கல்விகொள்கை ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை சமூகத்தில் பரப்ப ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். ஒரு குறிப்பிட்ட அமைப்பில் அதாவது தேசிய கல்விக் கொள்கையில் அதிகமான அதிகாரம் குவிந்திருக்கிறது. இது நிச்சயம் கல்வி முறையைச் சேதப்படுத்தும்.கல்வி என்பது வலிமையான பணக்காரர்களுக்கு மட்டும்தான்என்பதில் எனக்கு நம்பிக்கை யில்லை.சிந்தனைகள் எந்தவிதமான வெறுப்புணர்வு இல்லாமல்போட்டியிடும்போது, அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.ஆனால் நீ குறிப்பிட்ட மதத்தைச்சேர்ந்தவர்; ஆதலால், நீ பேசக்கூடாது என்று மற்றொருவரிடம் நீங்கள் சொல்லும்போது பிரச்சனை உருவாகிறது.இந்தத்துவாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்று சிலரை மத்திய அரசு கூறுகிறது. ஆனால், அவர்கள் வெளிப்படுத்தும் ஏராளமான சிந்தனைகளில் இந்துத்துவா என்பதே இல்லை. மற்றவர்களை அவமானப்படுத்துவதும், கொலை செய்வதுமாக இருக் கிறது.இவ்வாறு ராகுல் பேசினார்.