நெல்லை:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நெல்லை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
15 நாட்களுக்கு முன் நெல்லைக்கு மாற்றப்பட்ட அவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் நீஷ் (42). கடலூர் மாவட்டம் சிதம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடுவராகப் பணியாற்றி வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றப் பணியிடமாற்றம் மூலம் நெல்லை மாவட்டத் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நடுவராக நியமிக்கப்பட்டார்.நெல்லை மாவட்டத் தலைமை நீதித்துறை நடுவராகக் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி பதவியேற்ற இவர் ஏப்.28 அன்று உடல்நலக் குறைவு காரணமாக விடுப்பில் சென்றார்.
அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி ஞாயிறன்று இரவு 11:45 மணியளவில் உயிரிழந்தார். உயிரிழந்த நீதித்துறை நடுவர் நீஷுக்குத் திருமணமாகி மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.புதிதாகப் பதவியேற்ற நிலையில் பணியைத் தொடங்கும் முன்னரே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நீதித்துறை நடுவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.