tamilnadu

img

நெல்லை முன்னாள் மேயர் கொலைவழக்கு : கார்த்திகேயன் பாளை.,சிறையில் அடைப்பு

திருநெல்வேலி:
திமுகவை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேரை கொலை செய்த வழக்கில், கைதான கார்த்திகேயனை அடுத்த மாதம் 14 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

திமுக-வை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் ஆகியோர் சென்ற 23 ஆம் தேதி கொடூரமாக வெட்டிக் கொல்லப் பட்டனர். இந்த கொலை தொடர்பாக தனிப்படைகாவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் திமுக நிர்வாகி சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனுக்கு கொலையில் தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. காவல்துறை விசாரணையில் கொலை செய்ததை கார்த்திகேயன் ஒப்புக்கொண்டார் .இதனிடையே கைது செய்யப்பட்ட கார்த்திகேயன், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு 5-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி வீட்டில், செவ்வாய்க்கிழமை இரவில்  ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி நிஷாந்தினி உத்தரவிட்டதை தொடர்ந்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் கார்த்திகேயன் அடைக்கப்பட்டார்.

சீனியம்மாளுக்கு சம்மன் 
இந்த வழக்கில் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்ப உள்ளனர்.கொலைவழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீ சாருக்கு மாற்றப்பட்டுள்ளதால் அவர்களிடம்  வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும், மாநகர போலீசார் ஒப்படைத்தனர். அந்த ஆவணங்களை புதனன்று சி.பி.சி.ஐ.டி. பிரிவு எஸ்.பி. விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் தீவிரமாகஆய்வு செய்தனர். மேலும் சிறையில் அடைக் கப்பட்ட கார்த்திகேயனை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஆயத்த பணி களை அவர்கள் புதனன்று தொடங்கினர். கார்த்திகேயனை காவலில் எடுத்து விசாரிப்பதற்கான மனுவை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் கோர்ட்டில்  வியாழக்கிழமை  தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாகதி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு முறைப்படி  சம்மன் அனுப்பப்படுகிறது.