திருநெல்வேலி:
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் அசோக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பு ஆர்.எஸ்.ஏ. நகரை சேர்ந்த முருகன் மகன் அசோக் (வயது 23). இவர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட பொருளாளராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வந்தார். கடந்த 12-ந் தேதி இரவு கரையிருப்பு பகுதியில் சாதி வெறியர்கள் அவரை வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் உத்தரவின் பேரில், நெல்லை டவுன் உதவி கமிஷனர் சதீஷ் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சிநாதன், சப்-இன்ஸ்பெக்டர் வேல்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.போலீசார் விசாரணையில் இந்த கொலை தொடர்பாக கரையிருப்பு, சிதம்பர நகர் பகுதியை சேர்ந்த பேச்சிராஜ், முத்துபாண்டி, மூக்கன், பாலு, கணேசன், முருகன் ஆகிய 6 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இதில், மூக்கன், பாலு, கணேசன், முருகன் ஆகிய 4 பேரும் உடன் பிறந்த சகோதர்கள் ஆவார்கள்.
இந்த கொலை வழக்கில் மேலும் சிலரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த 17 வயது சிறுவர்கள் 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.