tamilnadu

வரதட்சணை கேட்டு மிரட்டிய கணவர் உட்பட 2 பேர் மீது வழக்கு!

தூத்துக்குடி,ஜூலை 2- ஸ்ரீவைகுண்டம் அருகே காதல் மனைவி யிடம் வரதட்சனை கேட்டதாக அவரது கணவர் மற்றும் அவரது சகோதரி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஸ்ரீமூலக்கரை கிராமம், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுடலைமுத்து மகன் அன்பழகன் (22), லாரி டிரைவர். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த சினேகா (19), என்ற பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த மே 22ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சினேகா ஸ்ரீவை குண்டத்தில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். அன்பழகனுக்கு சுசீலா (28) என்ற சகோதரி உள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலை யில் திருமணமான மறுநாளே அன்பழகனை யும் அவரது மனைவியையும் உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி பிரித்து வைத்துள்ளனர்.

இதனால் சினேகா தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், அன்பழகனின் தாயார் காசியம்மாள் 25ம் தேதி மரணம் அடைந்து விட்டார். அப்போது துக்கம் விசாரிக்கச் சென்ற சினேகாவிடம், 15 பவுன் நகை வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என அன்பழகனும், சுசீலாவும் கேட்டார்க ளாம். இல்லையென்றால் கணவருடன் சேர்ந்து  வாழ முடியாது என்று மிரட்டினார்களாம். இதுகுறித்து சினேகா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் அவரது கணவர் அன்பழகன், மற்றும் சுசீலா ஆகிய இருவர் மீதும் இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.