tamilnadu

img

மன்னார்குடி நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் மகத்தான வெற்றி...

மன்னார்குடி:
ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மன்னார்குடி நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் வேலைநிறுத்தப்போராட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து வியாழன் முதல் தூய்மைப் பணியாளர்கள் மகிழ்ச்சியோடுதங்கள் பணிகளுக்கு திரும்பினர். 

திருவாரூர்மாவட்டஆட்சியர் நிர்ணயித்தபடி ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் தின  ஊதியம் ரூ.385ஐ வழங்கவேண்டும் என வலியுறுத்தி 27.11.2020 முதல் மன்னார்குடி நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள்   தொடர் வேலைநிறுத்தம் செய்து வந்தனர். 2.12.2020 அன்று குடும்பத்துடன் நகராட்சி அலுவலகம் முன்பு  காத்திருப்பு போராட்டத்தில்  ஈடுபடுவதென முடிவு செய்திருந்தனர்.  இதற்கு ஆதரவாக 4.12.2020 அன்று நிரந்தர பணியாளர்கள் ஒருநாள்அடையாள ஆதரவு வேலை நிறுத்தம் செய்வதெனவும் 7.12.2020 அன்று மாவட்டம் முழுவதும் தூய்மை பணியாளர்கள் கிளர்ச்சிப் போராட்டத்தில்  ஈடுபடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

புதன் அன்று போராடும்  தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்ட பிரம்மாண்டமான காத்திருப்புப் போராட்டம் கொட்டும் மழையில் ஜி.ரெகுபதிதலைமையில் நடைபெற்றது.  இப்போராட்டத்தில் சங்கத்தின் மாநிலத்தலைவர்  நா.பாலசுப்பிரமணியன், சிஐடியு தலைவர்கள் டி.முருகையன்,இரா.மாலதி, ஏ.பி.டி லோகநாயகி, டி.ஜெகதீசன்,கே.பிச்சைக்கண்ணு, கே. தனுஷ்கோடி , எம்.மணி ஆகியோர் கலந்து கொண்டனர்இதன் பின்னணியில் மன்னார்குடி வருவாய் வட்டாட்சியர் எம். செல்வி போராடும் தொழிலாளர் தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். வட்டாட்சியர்அலுவலகத்தில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் மன்னார்குடி நகராட்சிஆணையர் ரா.  கமலா, நகராட்சி பொறியாளர் மற்றும் இதர அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையின் முடிவில் 1.12.2020 முதல் மாவட்டஆட்சியர் நிர்ணயித்த ரூ.385 தின ஊதியத்தை வழங்குவதெனவும் ஏப்ரல் முதல் அமல்படுத்த வேண்டிய தினக்கூலியில் விடுபட்ட தொகையில்  அனைவருக்கும் தலா  ரூ. 5000/= வீதம் ரூபாய் 4,00,000/= நிலுவைத் தொகையை ஒப்பந்ததாரர் வழங்குவது எனவும்,  இதரக் கோரிக்கைகளை நிறைவேற்றித்தரவும் நகராட்சிநிர்வாகம் ஏற்றுக்கொண்டு  உடன்பாடு ஏற்பட்டது. இதனடிப்படையில் வேலை நிறுத்தப்போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதாக சங்கத்தால் அறிவிக்கப்பட்டது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தூய்மைப் பணியாளர் கூறும்போது, “எங்கள் சங்கத்தின் வழியில்  எங்கள் ஒற்றுமைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி” என மகிழ்ச்சி பொங்க  கூறினார்.