திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு தொழிலாளர் துறை ஆணையர் அறிவிப்பிற்கு மாறாக தேர்தல் நடைபெற்ற நாளான ஏப்ரல் 06 ஆம் தேதி மன்னார்குடி நகராட்சியில் துப்புரவு நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 70+114 பேரும், கூத்தாநல்லூர் நகராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் 22+60 பேரும், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் பணிபுரியும் 28+51 நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களையும் தேர்தல் ஆணையத்தின் உத்திரவிற்கு எதிராக நகராட்சி ஆணையர்கள் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தி உள்ளனர்.
தேர்தல் சட்ட நடவடிக்கையின் படி மூன்று நகராட்சி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் நகராட்சி ஆணையரை (பொ) சிஐடியு நிர்வாகிகள் எஸ்.இராமசாமி, ராஜேந்திரன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து தேர்தல் ஆணைய உத்தரவுப்படி விடுப்பு வழங்க மாவட்ட சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.இதையடுத்து திருவாரூர் நகராட்சி மட்டும், தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட ஆட்சியரிடம் மின்னஞ்சல் வாயிலாக புகார் மனு சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன் தெரிவித்துள்ள விவரம்: திருவாரூர் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் 125 பேருக்கு 1.4.2020 அன்று மாவட்ட ஆட்சியர் அறிவித்த தினக்கூலி (உத்தரவின்படி) ரூபாய் 385 கிடைக்கப்பெறாமல் 12 மாதங்களாக தினக்கூலியாக ரூபாய் 290 மட்டும் பெற்று வருகிறார்கள். இதனால் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ரூபாய் ரூ. 43.34 லட்சம் -125 ஒப்பந்த தொழிலாளர்கள் இழந்து உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, இழந்த பணத்தை பெற்றுத்தரவும், உடனடியாக தாங்கள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.