districts

கந்து வட்டிக்கு வாங்கி தொழில் செய்யும் சாலையோர வியாபாரிகளுக்கு கூட்டுறவு வங்கியில் கடன் வழங்குக! சிஐடியு மனு கொடுக்கும் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 9 - திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் வையம்பட்டியில் சாலையோரம் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் 150 குடும்பங்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும். தினசரி கந்து வட்டிக்கு பணம் வாங்கி வியாபாரம் செய்யும் வையம்பட்டி சாலையோர வியாபாரிகளுக்கு கூட்டுறவு சொசைட்டியில் கடன் வழங்க வேண்டும். ஆக்கிரமிப்பு மற்றும் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்துவது முற்றிலும் கைவிட வேண்டும்.   சனிக்கிழமை வாரச் சந்தையை ஐயப்பன் கோவில் அருகில் உள்ள அரசு நிலத்தில் சந்தையை தொடங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டம் 2005 இன் படி தொழிற்சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், காவல்துறை அதிகாரிகளை கொண்டு கூட்டுக் குழு கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்க வையம்பட்டி கிளை சார்பில் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு ஒன்றிய செயலாளர் அந்தோணிசாமி தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி சிஐடியு மாவட்ட செயலாளர் சிவராஜ், புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர். மனு கொடுக்கும் போராட்டத்தில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி, வாலிபர் சங்க ஒருங்கிணைப்பாளர் முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் பேசினர்.