tamilnadu

கேரளத்தில் 101 காவல்துறையினருக்கு கோவிட்... அரசியல் கட்சிகள் பொறுப்புடன் செயல்பட முதல்வர் வேண்டுகோள்

திருவனந்தபுரம்:
கேரளத்தில் கோவிட் பரவல் கடுமையாகிறது என்கிற பிரச்சினையை தொடர்ந்து சுட்டிக்காட்டிய போதிலும், போராட்டம் நடத்துவோர் அதைபெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றுமுதல்வர் பினராயி விஜயன் கூறினார். ஊடகங்களும் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அதனால்தான் இதற்கு முக்கியத்துவம் அளித்து கூறப்படுகிறது என்றும் செய்தியாளர்கள் கூட்டத்தில் முதல்வர் தெரிவித்தார்.

கோவிட்டோடு வாழ வேண்டிய இந்த கட்டத்தில், நமது முந்தைய வாழ்க்கை முறையேஅடியோடு மாற்றியுள்ளோம். மக்களின் உயிரைக் காப்பாற்றுவற்காகவே இந்த எச்சரிக்கை. ஆனால் எதிர்க்கட்சி அதையெல்லாம் கிளர்ச்சி என்ற பெயரில் தகர்த்து வருகிறது. உலக சுகாதாரஅமைப்பு கூட கூட்ட நெரிசலை தவிர்ப்பது முக்கியமானது என்று கூறுகிறது. அதை பொருட்படுத்தாமலே அதிக அளவில் ஆட்களை திரட்டி போராட்டம் நடத்தப்படுகிறது.வைரஸ் தொற்று எளிதில் பரவும் சூழல் உருவாக்கப்படுகிறது.  இதன் விளைவாக, போராட்டங்களை எதிர்கொள்ளும் மூத்த அதிகாரிகளும் காவல்துறையினரும் கோவிட்டுக்கு இலக்கு ஆக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களில் நடந்த போராட்டங்களை தடுக்க முயன்ற 101 காவல்துறையினரிடம் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில், ஒரு டி.எஸ்.பி, ஒரு காவல் ஆய்வாளர், 12 எஸ்.ஐ, 8  ஏ.எஸ்.ஐ., 71 காவலர்கள், ஒரு மூத்த அதிகாரி ஆகியோர் பாதிப்புக்கு உள்ளாயினர்.164 பேர் முதன்மை தொடர்பிலும் 171 பேர்கண்காணிப்பிலும் உள்ளனர். பல காவல் அதிகாரிகள் சக ஊழியர்களின் நோய் காரணமாக தனிமைப்படுத்தலில் உள்ளனர். இது கோவிட்டுக்கு எதிரான அரசாங்கத்தின் முயற்சிகளைத் தடுக்கிறது. போராடுவோர் தனிமனித இடைவெளியை பராமரிப்பதில்லை. இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று முதல்வர் கூறினார்.