திருவள்ளூர் மாவட்டத்தில் சமையல் கேஸ் மானியத்தில் ரூ.19.88 லட்சம் மோசடி செய்த அதிமுக நகர செயலாளரும், கூட்டுறவு சங்க தலைவர் கந்தசாமி உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் பாரத் கேஸ் சிலிண்டர் விநியோகம் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 2013-2017 ஆம் ஆண்டுகளில் பொது மக்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட கேஸ் சிலிண்டர் மானியத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்திருப்பதாக திருவள்ளூர் மாவட்ட துணை பதிவாளர் காத்தவராயன் வணிகவியல் குற்றப்புலனாய்வு போலீசாருக்கு புகார் தெரிவித்தனர்.
புகாரின் அடிப்படையில் வணிகவியல் குற்றப்புலனாய்வு போலீசார் ஆய்வு மேற்கொண்டதில் கேஸ் சிலிண்டரில் மானியத்தில் 19 லட்சத்து 88 ஆயிரத்து 294 ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், மோசடியில் ஈடுபட்ட திருவள்ளூர் அதிமுக நகர செயலாளரும் திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமான கந்தசாமி உட்பட நான்கு பேர் மீது வணிகவியல் குற்றப்புலனாய்வு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து கேஸ் எரிவாயு மையத்தின் இளநிலை உதவியாளர் எழிலரசனை வணிகவியல் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள கூட்டுறவு சங்கத் தலைவரும் அதிமுக நிர்வாகி கந்தசாமி, லட்சுமி, ஆனந்தன் ஆகிய 3 பேரையும் வணிகவியல் குற்ற புலனாய்வு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.