tamilnadu

img

நீட் ஆள் மாறாட்டம் : இர்பானுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்; நீதிமன்றம் அனுமதி

தேனி:
தர்மபுரி அரசு  மருத்துவக் கல்லூரி மாணவர் இர்பானுக்கு தேனி நீதிமன்றம் ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கியுள்ளது. மற்ற மாணவர்கள் அவர்களது தந்தை ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் குறித்து செவ்வாய்கிழமை விசாரணை நடைபெறும் என நீதிபதி பன்னீர்செல்வம் கூறினார்.

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்துதேர்வெழுதி தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த டாக்டர் வெங்கடேசனின் மகன் உதித்சூர்யா கடந்த மாதம் 26-ஆம்தேதி சிபிசிஐடி காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார். உடந்தையாக இருந்த அவரது தந்தையும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இதே போல நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வெழுதிய பிரவீன்,ராகுல், அவர்களது தந்தை சரவணன், டேவிஸ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி யில் படித்து வந்த மாணவர் இர்பான் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தொடர்ந்து அவரது தந்தை முகமது சபியையும் சிபிசிஐடி காவல்துறையினர்  கைது செய்தனர்.இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக நீட் தேர்வு முறைகேடு  தொடர்பாக சென்னை மாணவி பிரியங்கா,  அவரது தாய் மைனாவதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இர்பானுக்கு ஒரு நாள் காவல் 
ஆள் மாறாட்ட சம்பவத்தில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் இர்பான் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார். பின்பு தேனி மாவட்ட சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.இந்த வழக்கில் இதுவரை பிடிபட்ட ஐந்து பேரில் இவரிடம் மட்டும் சிபிசிஐடி. காவல்துறை விசாரணை நடத்தாமல் இருந்தது. எனவே இவரை தங்கள் பாதுகாப்பில் எடுத்து ஐந்து நாள் விசாரணைநடத்த சிபிசிஐடி தரப்பில் தேனி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப் பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை திங்களன்று தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதற்காக மாணவர்இர்பான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார். நீதிபதி பன்னீர்செல்வம், மாணவர் இர்பானை ஒருநாள் சிபிசிஐடி காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இர்பான் தேனிசமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆய்வாளர் சித்ராதேவி அவரிடம் விசாரணை நடத்தினார். இதில் இடைத்தரகர் களை அறிமுகப் படுத்தியது யார்?, எவ்வளவு பணம் தரப்பட்டது?, கல்லூரி சேர்க்கையின் போதுதேர்வு எழுதிய மாணவர் உடன் வந்திருந்தாரா? என்பன உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்பட்டன.

இர்பான் அளித்த வாக்குமூலத்திற்கும் மற்ற மாணவர்கள் கூறிய தகவல்களுக்கும் உள்ள தொடர்பு, வித்தியாசம் குறித்து காவல்துறையினர் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மாணவர்கள் பிரவீன், அவரது தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவரது தந்தை டேவிஸ் ஆகியோரது ஜாமீன் மனு திங்களன்று தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இம்மனு மீதான விசாரணையை இன்று (செவ்வாய்) நடத்த நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் இர்பானின் தந்தை முகமதுசபி ஒரு போலி மருத்துவர் என்பது ஏற்கனவே விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே முகமதுசபி மூலம் இடைத்தரகர்கள் குறித்த விபரங்களை பெறும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.  
விசாரணை குழுவினர் ஆஜர் .தர்மபுரி மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்தும், சான்றிதழ் சரிபார்த்த அலுவலர்கள் தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் திங்களன்று ஆஜராகி விளக்க மளித்தனர்.