போடி, மார்ச் 17-
போடியில் துணை முதல்வர் பங்கேற்ற வாக்கு சேகரிப்பு கூட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போடியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு ஒவ்வொரு சமுதாய மக்களையும் தனித்தனியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை) மாலை, குலாலர்பாளையத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு சொந்தமான திருமண மண்டபத்தில் அந்த சமூகத்தை சேர்ந்த மக்களிடம் வாக்கு சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் வி.ப.ஜெயபிரதீப் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் திருமண மண்டபத்திற்கு வந்து வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அதே சமூகத்தை சேர்ந்த தி.மு.க. நகர செயலாளர் மா.வீ.செல்வராஜ் மற்றும் அதே சமூகத்தை சேர்ந்த தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி ஆதரவாளர்கள் பணப்பட்டுவாடா நடப்பதாகக் கூறி மண்டபத்தை முற்றுகையிட்டனர். அப்போது தி.மு.க., அ.தி.மு.க.வினரிடையே கைகலப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து போடி காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையிலான காவல் துறையினர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளை பத்திரமாக மீட்டு வெளியேற்றினர்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு இரு தரப்பினரையும் வெளியேற்றினர். மேலும் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.