tamilnadu

img

எட்டு வழிச்சாலை வழக்கில் அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது

தஞ்சாவூர் ஏப்.23-தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூர் கணபதிநகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கமாநில தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மாநில துணைத் தலைவர்கள் டி.இரவீந்திரன், கே.முகமதுஅலி, பொருளாளர் கே.பி.பெருமாள், செயலாளர்கள் டெல்லி பாபு, சாமி.நடராஜன், தமிழ்நாடுவிவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம், மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது: சேலம்- சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் குறித்து ஏப்.8 ஆம் தேதி கோர்ட் நல்லதொரு தீர்ப்பை வழங்கி உள்ளது. குறிப்பாகசுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் இத்தகையதிட்டங்களுக்காக நிலத்தை கையகப்படுத்தியது தவறு என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.இனி எந்த திட்டத்திற்கும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் தொடங்கக் கூடாது என வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது. ஆனால் இதற்கு நேர் மாறாக ஏப்ரல் 15ஆம் தேதி சேலம் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மத்தியஅமைச்சர் நிதின் கட்காரி நீதிமன்ற தீர்ப்பை உதாசீனப்படுத்தும் வகையில், 8 வழிச் சாலை திட்டத்தை திட்டமிட்டபடி அமைத்தே தீருவோம் என்று பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. நீதிமன்ற தீர்ப்பால் நிம்மதி பெருமூச்சு விட்ட விவசாயிகள் மத்தியில், மத்திய அமைச்சரின் பேச்சு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழக அரசாங்கம் உயர் நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடந்து கொள்ள வேண்டும். மேல்முறையீடு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனதமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. 


விவசாயிகளின் விருப்பத்திற்கு எதிராக மத்திய மாநில அரசுகள் நடந்து கொண்டால் அதை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்துவோம். இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக வருகிற 28-ஆம்தேதி திருவண்ணாமலையில் எட்டு வழிச்சாலையின் பாதிக்கப்பட்ட விவசாயிகள், இவ்வழக்கை நடத்திய வழக்கறிஞர்கள், நீதிபதி சிவசுப்ரமணியம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் சிறப்புக்கருத்தரங்கம் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு கூட்டியக்கத்தின் சார்பில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறையை பொறுத்து எங்களுடைய செயல்பாடுகளை எப்படி அமைத்துக் கொள்வது என தீர்மானிக்க இருக்கிறோம். காவிரி டெல்டா விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி, ரசாயன மண்டலமாக அறிவித்து தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுக் கொண்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் கொண்டு வர மாட்டோம். பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிப்போம் என அறிவித்தனர்.ஆனால் அதற்கு மாறாக சுற்றுச்சூழல் அறிக்கையை ஓஎன்ஜிசி நிறுவனம் தாக்கல் செய்யலாம் என இரண்டு நாட்களுக்கு முன்னர்மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம்அனுமதி அளித்துள்ளது. இது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இது விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை மீறும் செயலாகும். இவர்கள் திட்டத்தில்எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்பதுஇவர்களுடைய செயல்பாடுகளில் இருந்து தெரிகிறது. ஆகவே காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகஅறிவிக்க வேண்டும். மீத்தேன், ஷேல் கேஸ்,ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த திட்டங்களையும் அறிவிக்கக் கூடாது. மீறினால் அதனை எதிர்த்து ஒத்த கருத்துடைய அமைப்புகளை ஒருங்கிணைத்து கூட்டு போராட்டம் நடத்தப்படும். எண்ணெய் கிணறுகள் தோண்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நேரடியாக களத்தில் இறங்கி தடுப்போம். இதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதே தமிழக அரசு விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும். 


அமெரிக்க படை புழுக்களின் தாக்குதல் லட்சக்கணக்கான ஏக்கர் மக்காச்சோள பயிர்களில் அதிகமாகக் காணப்படுகிறது. மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.7,410, நஞ்சை பயிர்களுக்கு ரூ.13,500 இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அறிவிப்போடு சரி. இதுவரை விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. அரசு குறைந்த தொகையைத் தான் அறிவித்தது என்றாலும், உடனடியாக இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். பெட்ரோலிய ரசாயன மண்டலம் கரூர்- கோவை 6 வழிச்சாலை, எண்ணெய் குழாய் பதிப்பு, உயர் அழுத்த மின்கோபுரம் திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்தைக் கேட்க வேண்டியதில்லை என அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். வேதாந்தா நிறுவனமும் இதையே வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு பலத்த அடி கொடுக்கும் வகையில் தான் உயர்நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவசாயிகளை பாதிக்கக் கூடிய, விவசாயிகளின் நிலத்தின் மீதான உரிமையை பாதிக்கக் கூடிய அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு கைவிட வேண்டும். விவசாயிகளின் நில உரிமையை பாதிக்கப்படக் கூடியஎந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாடு விவசாயிகள்சங்கம் கடுமையாக எதிர்க்கும்". இவ்வாறு பெ.சண்முகம் கூறினார்.     (ந.நி)