சென்னை:
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக இந்திய மருத்துவக்கழகத்தின் தமிழக பிரிவு பரிந்துரைத்த கட்டணத்தை அமல்படுத்தக் கூடாது என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய மருத்துவக் கழகத்தின் தமிழக பிரிவு தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை பரிந்துரைத்துள்ளது. அதன்படி, கொரோனா நோய் மிதமான பாதிப்பு உள்ளவருக்கு சிகிச்சையளிக்க 10 நாட்களுக்கு ரூ.2,31,820 என்றும் தீவிர நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 17 நாட்களுக்கு ரூ.4,31,411, என்றும், உணவுக்கு தினமும் ரூ.9600 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளித்துவரும் சூழலில் தனியார் மருத்துவமனைகள் இவ்வளவு கட்டணம் வசூலிக்க அனுமதித்தால் கொரோனா நோயை கட்டுப்படுத்த எந்த வகையிலும் இயலாது.
ஏற்கனவே, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளிடம் அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று புகார் எழுந்து வருகிறது. இதை முறைப்படுத்துகிறேன் என்ற பெயரில் தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிக்க அரசு அங்கீகாரம் அளிப்பதை போலவே பரிந்துரை உள்ளது.உலகில் அதிக மக்கள் தொகைக்கொண்ட சீனா கொரோனா நோயிலிருந்து வெற்றிகரமாக மீண்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நாட்டில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளை அரசுடமையாக்கியது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா நோய் பாதித்த அனைத்து நோயாளிகளுக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் உள்ளிட்டவர்களுக்கும் 100 சதவீதம் இலவசமாக சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளது.
கொரோனா நோய் பாதித்த அனைவருக்கும் இலவசமாக அரசு சிகிச்சை அளித்தால் மட்டுமே இந்த நோயின் பிடியிலிருந்து அனைவரையும் மீட்டெடுக்க முடியும். எனவே, இந்திய மருத்துவக் கழகத்தின் தமிழக பிரிவு பரிந்துரைத்துள்ள தனியார் மருத்துவமனைக்கான கட்டணத்தை தமிழக அரசு அமல்படுத்தக்கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.