தஞ்சாவூர் அக்.5- தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில், பலகாலமாக அரசின் வீட்டுமனை பெற்று குடியிருந்து வரும் மக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் பி.என்.பேர் நீதி ஆழ்வார் தலைமையில், தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் சுரேஷிடம் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, “நாங்கள் நாஞ்சிகோட்டை ஊராட்சி கிராம கணக்கில், ராஜீவ்காந்தி நகர், இந்திரா நகர் ஆகிய இடங்களில் வசித்து வருகின்றோம். தமிழக அரசால் கடந்த 1990-91 ஆம் ஆண்டு எங்கள் கிராமத்தைச் சேர்ந்த 280 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்பட்டது. அரசால் வழங்கப்பட்ட இடத்தில் சுமார் இருபத்தைந்து வருடங்களாக வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். ஆனால் எங்கள் கிராம கணக்கில் இதுவரை வகை மாற்றம் செய்யப்படாமலும், பட்டா வழங்கப்படாமலும் உள்ளது. இதனால் எங்கள் பகுதி மக்கள் மின் இணைப்பு மற்றும் அரசு சலுகைகள் பெறுவது சிரமமாக உள்ளது. எனவே தாங்கள் எங்கள் கிராம கணக்கில் வகை மாற்றம், போக்குவரத்து செய்து விரைவாக பட்டா வழங்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மனுவில் நூற்றுக்கணக்கானோர் கையொப்பமிட்டுள்ளனர். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, இன்ஜினியரிங் தொழிற்சங்க தலைவர் வி.ராமலிங்கம், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் எஸ்.விக்டர் பெஞ்சமின் மற்றும் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் வருவாய்க் கோட்டாட்சியரைச் சந்தித்து மனு அளித்து கோரிக்கை விடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் சுரேஷ், உடனடியாக இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மூலம், விசாரித்து மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்து, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.